செம அறிவிப்பு..! விவசாய பெண்கள் சொந்த நிலம் வாங்க ரூ.5 லட்சம் கடன் பெற விண்ணப்பிக்கலாம்..!
கூட்டுறவு வங்கிகளில் நிலமற்ற ஏழை எளிய விவசாய குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் அதிகபட்சம் ரூ.5 லட்சம் வரை கடன் பெற்று பாசன வசதியுடைய நிலத்தை வாங்கிக் கொள்ளலாம்.
இந்த திட்டத்தில் சேர கட்டாயம் பாசன வசதி இருக்க வேண்டும், அதிகபட்சம் 2 ஏக்கர் வரை வாங்கிக் கொள்ளலாம். ஆனால் அரசு ரூ.5 லட்சம் வரை மட்டுமே கடன் பெற ஏற்பாடு செய்யும். இந்தக் கடனை 5 ஆண்டுகளுக்குள் கட்டி முடிக்க வேண்டும். வட்டி விகிதம் 10 விழுக்காடு செலுத்த வேண்டியிருக்கும்.
இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் பெண்கள் 21 வயதுக்கும் மேற்ப்பட்டவர்களாகவும், 55 வயதுக்குட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். வாங்கும் நிலத்தை வங்கியின் பெயரில் அடமானம் எழுதி வைக்கப்படும். நிலம் பத்திரப்பதிவு செய்தபிறகு உரிமையாளர் பெயரிலான பத்திரம், புதிய வில்லங்கச்சான்றிதழ் வங்கியில் ஒப்படைக்க வேண்டும். ஒருவர் இந்த கடன் தொகைக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும்.
நில உரிமையாளர், உத்தரவாதம் அளிப்பவர் என இருவரின் ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, பான் கார்டு, பத்திரம் மற்றும் விற்பனை ஒப்பந்தம் செய்யப்பட்ட சொத்து ஆவணங்கள், பட்டா, சிட்ட, அடங்கல், சொத்து வரி ரசீது என எல்லாவற்றையும் வங்கியிடம் ஒப்படைக்க வேண்டும்.வங்கி மதிப்பீட்டாளரால் அளிக்கப்பட்ட சொத்து மதிப்பீடு, சட்ட ஆலோசகர் கருத்து ஆகியைவையும் இணைக்கப்பட வேண்டும். கடனை அடைக்கும் வரை அந்த நிலத்தில் விளைவிக்கப்படும் பயிர்களுக்கு கட்டாயம் பயிர் காப்பீடு செய்ய வேண்டும்.
இந்த நிபந்தனைகளுக்கு உட்பட்டு, தகுதியான விவசாய தொழிலாளர் பெண்கள் சம்பந்தபட்ட மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு வங்கி கிளைக்கு சென்று விண்ணப்பிக்கலாம். எனவே, தேவைப்படுபவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவும்.