பிரபல எழுத்தாளர் இராசேந்திர சோழன் காலமானார்!

எழுத்தாளர் அஸ்வகோஷ் என அறியப்படும் ராஜேந்திர சோழன் (79) உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று காலமானார். '21வது அம்சம்', 'புற்றில் உறையும் பாம்புகள்' உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ள இவர், 'பிரச்சனை', 'உதயம்', 'மண்மொழி' உள்ளிட்ட இதழ்களையும் நடத்தி வந்தார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் நிறுவனர்களில் ஒருவராக இருந்தார்.
அவரது உடல், அவர் விருப்பப்படி, வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் எழும்பூர் நீதிமன்றம் அருகே நீதிபதிகள் குடியிருப்பில் உள்ள அவர் மகன் வீட்டிலிருந்து அரசு மருத்துவமனைக்கு ஒப்படைக்கப்படுகிறது.
எழுத்தாளர் இராஜேந்திரசோழன் 1945 டிசம்பர் 17 ஆம் தேதி தென்னாற்காடு மாவட்டம் உளுந்தூர்ப்பேட்டையில் பிறந்தார். தாயும் தந்தையும் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள். 1961-இல் பள்ளியிறுதி முடித்தார். தந்தை ஆசிரியர் பயிற்சிக்குச் செல்லும்படிச் சொல்ல அதை மறுத்து சென்னைக்குச் சென்று பலவேலைகள் செய்து வாழ்ந்தார். நான்கு ஆண்டுகளுக்குப்பின் 1965 இல் திரும்பிவந்து ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்து தகுதி பெற்றார்.
1968-இல் ஆசிரியர் பயிற்சியில் சேர்ந்து ஆசிரியராகி இருபது ஆண்டுகாலம் பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்று விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் வசித்து வந்தார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் நிறுவனர்களில் ஒருவராக இருந்தார்.
இவருக்கு ராஜகுமாரி என்ற மனைவியும், ஒரு மகளும் மகனும் உள்ளனர். மகள் சிதம்பரத்தில் வசித்து வருகிறார். மகன் ஆர்.பார்த்திபன் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றுகிறார்.
இலக்கிய வாழ்க்கை
ரஷ்ய எழுத்தாளர்கள் டால்ஸ்டாய், கார்க்கி இருவரின் எழுத்துக்களாலும் ஈர்க்கப்பட்ட ராஜேந்திர சோழனுக்கு, தமிழில் புதுமைப்பித்தனும், தி.ஜானகிராமனும் மனம் கவர்ந்த எழுத்தாளர்கள்.
1971இல் 'ஆனந்த விகடன்’ மாவட்ட அளவில் சிறப்பிதழ்கள் வெளியிட்டு, அது சார்ந்த சிறுகதைப் போட்டிகளும் நடத்தி வந்த நேரத்தில், தென்னார்க்காடு மாவட்டத்துக்கான சிறுகதைப் போட்டியில் 'எங்கள் தெருவில் ஒரு கதாபாத்திரம்' என்ற கதை மூலம் அறிமுகமானார். அரசுப் பணி எழுத்துக்குத் தடையாக இருக்கும் சூழல் என்பதனால் அஸ்வகோஷ் என்ற பெயரை வைத்துக்கொண்டார். தொடர்ந்து செம்மலர், தீக்கதிர் போன்ற இதழ்களில் அஸ்வகோஷ் என்னும் பெயரில் கதைகள் எழுதத் தொடங்கினார்.
வடதமிழகத்து அடித்தள மக்களின் வாழ்க்கையை எழுதிய படைப்பாளிகளில் ஒருவர். சிறுகதைகள், நாவல், கட்டுரைகள் எனக் கலை இலக்கியத்திலும்; அரசியல், அறிவியல், தத்துவம், போராட்டம் எனப் பொதுவாழ்விலுமாக, வாழ்க்கையின் பெரும்பகுதியை சமூகச் செயல்பாடுகளால் நிறைத்தவர்.
ராஜேந்திர சோழன் பற்றிய ஆவணப்படத்தை 2019இல் எழுத்தாளர் பவா செல்லதுரையின் மகன் வம்சி மற்றும் உமா கதிர் இருவரும் தயாரித்து இயக்கியுள்ளனர்.