அப்துல் கலாமுடன் பணியாற்றிய பிரபல விஞ்ஞானி காலமானார்!

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுடன் பணியாற்றிய பிரபல விண்வெளி விஞ்ஞானி நெல்லை முத்து (74) திடீர் உடல்நலக் குறைவால், திருவனந்தபுரத்தில் இன்று (ஜூன் 16) காலமானார்.
நெல்லை சு.முத்து தமிழ்நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி மற்றும் அறிவியல் எழுத்தாளர் ஆவார். திருநெல்வேலி மாவட்டத்தில் எம். சுப்பிரமணிய பிள்ளை - எம். சொர்ணத்தம்மாள் தம்பதியருக்கு 1951 மே 10ஆம் தேதி மகனாகப் பிறந்தார் முத்து.
திருநெல்வேலியில் உள்ள கிராமத்தில் பிறந்த முத்து, ஸ்ரீஹரிகோட்டா சசிஷ்தவான் விண்வெளி மையத்தில் முதல்நிலை விஞ்ஞானியாக செயல்பட்டு வந்தார். மேலும், மலேசியாவின் உலகத் தமிழ் கவிஞர் பேரவையால் வழங்கப்பட்ட ‘கவிமாமணி’ விருதுக்கும் சொந்தக்காரர்.
அதுமட்டுமின்றி, அறிவியல், சிறுவர் இலக்கியம், கவிதை, வரலாறு, மொழிபெயர்ப்பு, திறனாய்வு எனும் தலைப்புகளில் 70-க்கும் அதிகமான நூல்களை எழுதியுள்ளார். குறிப்பாக அறிவியல் சார்ந்து 100-க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார்.
‘செவ்வாயில் உள்வேட்கையும் நல்வாய்ப்பும்” என்ற தலைப்பில் செவ்வாயைப் பற்றிய கிரேக்க இதிகாச புராணக்கதைகள் மற்றும் நவீன விஞ்ஞான வாய்ப்புகளைப் பற்றியும் 2004ஆம் ஆண்டிலேயே எழுதியுள்ளார். இவர் எழுதிய நான்கு புத்தகங்களுக்கு, தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசு மற்றும் சிறந்த நூலாசிரியர் என்ற விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
அதுமட்டுமின்றி, இவரது “விண்வெளி 2057″ எனும் நூல், 2000ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் கணிதவியல், வானியல், இயற்பியல், வேதியியல் எனும் வகைப்பாட்டில் பரிசை பெற்றுள்ளது. “அறிவூட்டும் விஞ்ஞான விளையாட்டு” எனும் நூல் 2004ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் 'சிறுவர் இலக்கியம்' எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.
நெல்லை சு.முத்து திருநெல்வேலியை பூர்வமாகக் கொண்டிருந்தாலும் கூட, திருவனந்தபுரத்தில் உள்ள இஸ்ரோ நிறுவனத்தில் பல ஆண்டுகள் பணிபுரிந்ததால் அங்கு குடியேறினார். அதனைத் தொடர்ந்து, மதுரை மாவட்டத்தில் உள்ள தனது மகள் வீட்டில் சில ஆண்டுகள் வசித்து வந்தார் எனக் கூறப்படுகிறது. தற்போது, திருவனந்தபுரத்தில் உயிரிழந்த அவரது உடல், மதுரையில் உள்ள மகள் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டு, இறுதிச்சடங்குகள் நடத்தப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.