மாதம் 1000 ரூபாய் மட்டுமா, வட்டியும் சேர்த்து வருது! உதயநிதி அப்டேட்!
தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற 71ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் வேர்கள், விழுதுகள் மற்றும் சிறகுகள் திட்டங்களை தொடங்கி வைத்து, சென்னை மத்தியக் கூட்டுறவு வங்கியின் கொருக்குப்பேட்டை புதிய கிளை, திருவல்லிக்கேணி நகர கூட்டுறவுச் சங்கம் மற்றும் பூங்காநகர் கூட்டுறவு மொத்த விற்பனைப் பண்டகசாலையின் சிறு பல்பொருள் அங்காடிகள் ஆகியவற்றை திறந்து வைத்து 2,703 பயனாளிகளுக்கு 33.67 கோடி ரூபாய்க்கான கடனுதவி காசோலைகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், “மக்களுடன் நேரடியாக தொடர்பில் இருக்கும் துறை என்றால் அது கூட்டுறவுத் துறை தான். தமிழ்நாட்டில் 2 கோடியே 30 லட்சம் குடும்பங்களுக்கு பொது விநியோகத் திட்டத்தின் (PDS) கீழ் அத்தியாவசிய பொருட்களை கூட்டுறவுத்துறை மூலம்தான் வழங்குகின்றோம். இதற்கு கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் செயல்படும் 35 ஆயிரம் நியாய விலைக் கடைகள் எனும் மாபெரும் நெட்வொர்க் தான், முக்கிய காரணம்.
கூட்டுறவுத் துறையின் இந்த network தான், தமிழ்நாடு அரசின் மக்கள் நலத் திட்டங்கள் மிகப்பெரிய வெற்றி அடைவதற்கு அடிப்படைக் காரணமாக இருக்கின்றன. குறிப்பாக கொரோனா ஊரடங்கு காலம், புயல், மழை, வெள்ளம் போன்ற பேரிடர் நேரங்களில், அத்தியாவசியப் பொருட்களை, நிதி உதவிகளை மக்களிடம் அரசாங்கத்தால் உடனுக்குடன் கொண்டு சேர்க்க முடிந்தது என்றால், அதற்கு முக்கியமாக கூட்டுறவுத்துறையின் இந்த மகத்தான நெட்வொர்க் தான் உதவியாக செயல்பட்டது,
ஒன்றிய அரசு 1965-ஆம் ஆண்டு இந்திய உணவுக் கழகத்தை (Food Corporation of India) என்கிற நிறுவனத்தை தொடங்கியது. இதன் மூலம் இந்தியா முழுவதும் விவசாயிகளிடம் நெல், கோதுமை முதலான பொருள்களை கொள்முதல் செய்தது. ஒவ்வொரு மாநிலத்திலும் கிடங்குகள் அமைத்து, இருப்பு வைத்து (stock) தேவைப்படும் நேரங்களில் மாநிலங்களுக்கு ஒன்றிய அரசே வழங்கியது.
ஒரு கட்டத்தில், தமிழ்நாட்டுக்கு வழங்கப்பட்டு வந்த அரிசியின் அளவு குறைந்தது. மண்ணெண்ணெய் அளவும் குறைந்தது. அந்த சமயத்தில் தான், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் என்ற நிறுவனத்தை 1972ஆம் ஆண்டு உருவாக்கினார்கள்.
தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் அரிசி ஆலைகளும், கிடங்குகளும் அமைக்கப்பட்டன. விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்யப்பட்டது. நியாயவிலைக் கடைகள் ஊருக்கு ஊர் திறக்கப்பட்டன. அதன்பிறகு, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் நிறைவேற்றிய திட்டங்களால், தமிழ்நாட்டில் பசியோடு யாருமே கிடையாது என்கிற வகையில் அனைவருக்கும் உணவுக்கு உத்தரவாதம் செய்யப்பட்டது.இந்த நோக்கத்தின் அடிப்படையில் பார்த்தால் கூட்டுறவுத் துறையும் - திராவிட இயக்கமும் தான் தமிழ்நாட்டில் இருக்கிற ஒவ்வொரு மனிதனின் சுயமரியாதையையும் பாதுகாத்தது என்று சொல்லலாம்.
இன்றைக்கு கூட்டுறவுத் துறை முழுக்க கணினி மயமாக்கப்பட்டு உள்ளது. இந்தியாவிலேயே தமிழ்நாடு அளவுக்கு networkக்கும், modernized systemமும் உள்ள கூட்டுறவுத் துறை வேறு எந்த மாநிலத்திலுமே இல்லை. கூட்டுறவு என்றாலே ஒற்றுமை என்று அர்த்தம். அந்த வகையில், பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்கும் கூட்டுறவுத்துறை பங்களிப்பு செய்து வருகிறது.
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்திற்கு கூட்டுறவுத்துறையின் நியாய விலைக் கடைகள் மூலம் தான் உணவு தானிய பொருட்கள் அனுப்பப்படுகின்றன. நம்முடைய முதலமைச்சர் அவர்கள், நான் பொறுப்பு வகிக்கிற சிறப்புத்திட்ட செயலாக்கத்துறை, மூலம், இந்திய ஒன்றியமே திரும்பி பார்க்கிற வகையில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் எனும் மகத்தான திட்டத்தை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகின்றார்.
ஒரு கோடியே 16 லட்சம் மகளிர் மாதா, மாதம் 1000 ரூபாய் பெறுகின்ற இந்த திட்டத்தில், கூட்டுறவுத் துறையின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாகும். ஏனென்றால், கூட்டுறவு வங்கிகளின் வாயிலாக 8 லட்சத்து 29 ஆயிரம் மகளிருக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
அதுமட்டுமல்ல, மகளிர் உரிமைத்தொகையை Recurring Deposit ஆக செலுத்தி, அதன் மூலம் மகளிர் வட்டியைப்பெற்று குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு பெரிய அளவிலான தொகையாக பெறுவதற்கான ‘தமிழ்மகள்’ எனும் திட்டத்தையும் கூட்டுறவுத்துறை செயல்படுத்தி வருகின்றது. மேலும் சிறுசேமிப்பை ஓர் இயக்கமாகவே கூட்டுறவுத்துறை மாற்றியிருக்கின்றது.
கிராமப்புறங்களில் ஒரு கூட்டுறவு சொசைட்டி வந்து விட்டால், அது 10 Nationalised Bank கிளைகள் வந்ததற்கு சமம் என்று சொல்வார்கள். அந்த அளவுக்கு கிராமப்புற பொருளாதாரத்தின் முதுகெலும்பாக கூட்டுறவுத்துறை உள்ளது. சமூகத்தின் அனைத்து தரப்பினரின் மேன்மைக்காக உழைக்கின்ற கூட்டுறவுத்துறை இன்னும் பல உயரங்களைத் தொட நம்முடைய முதலமைச்சர் அவர்கள் என்றும் துணை நிற்பார்கள்” என்று கூறினார்.