ஒன்றல்ல...ரெண்டல்ல... மொத்தம் 106 பேருக்கு போலி விமான டிக்கெட் விற்பனை..!
அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலுக்கு உலகம் எங்கிலும் இருந்து பக்தர்கள் சென்று வழிபாடு நடத்தி வருகின்றனர். குறிப்பாக சென்னை, சேலம், மதுரை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து அயோத்திக்கு சிறப்பு ரயில்கள் விடப்பட்டுள்ளன. சென்னையில் இருந்து அயோத்திக்கு நேரடி விமான சேவையும் உள்ளது.
இந்த சூழலில் மதுரையில் போலி விமான டிக்கெட் உடன் விமான நிலையத்திற்கு வந்த நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் வெளியேற்றப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது. தனியார் விமான மூலம் அயோத்தி கோயில் அழைத்து செல்வதாக கூறி நூற்றுக்கும் மேற்பட்டோரிடம் மோசடி செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மதுரையில் இருந்து பெங்களூரு செல்வதற்காக போலி டிக்கெட்டுடன் வந்த பயணிகள் செய்வது அறியாது திகைத்து நின்றனர். தனியார் விமான நிறுவனத்தில் கேட்டபோது அவ்வாறு எதுவும் புக்கிங் செய்யவில்லை என்று கூறியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.