தேர்தலில் போட்டியிடாதது தியாகமல்ல வியூகம் : கமல்ஹாசன் தாக்கு..!

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஈரோட்டில் வீரப்பன்சத்திரம், கருங்கல்பாளையம் மற்றும் நாமக்கல் மாவட்டம் வெப்படை ஆகிய இடங்களில் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது கமல்ஹாசன் பேசியதாவது: தேர்தலில் போட்டியிடாமல் தியாகம் செய்து விட்டீர்களே என்று என்னிடம் கேட்கின்றனர். இது தியாகம் அல்ல, தமிழ்நாடு காக்கும் வியூகம். தமிழ்நாட்டின் வளர்ச்சி என்பது பல தலைவர்கள் போட்ட அடித்தளம். மதிய உணவுத்திட்டம் என்பது காமராஜர் தொடங்கி எம்ஜிஆர் அதை தொடர்ந்து, இன்று அதன் நீட்சியாக காலை உணவுத் திட்டமாக தமிழக முதல்வரால் நிகழ்த்தப்படுகின்றது. இதற்கு முன்பு கிழக்கிந்திய கம்பெனி வந்து நம்மை சுரண்டிவிட்டு சென்று விட்டனர். தற்போது மேற்கிந்திய கம்பெனி (குஜராத்) நம்மை சுரண்டி கொண்டிருக்கிறது.
அரசியலும் மதமும் கலந்தால் நாடு உருப்படாமல் போய்விடும் என்பதற்கு ஐரோப்பா கண்டம் பெரிய உதாரணம். காலை உணவுத்திட்டம், மகளிர் உரிமைத்தொகை போன்ற நலத்திட்டங்களை என் சகோதரர் செயல்படுத்துகிறார். இந்த திட்டத்தை ஏன் வடநாட்டில் செய்யவில்லை. 29 பைசாவை வைத்து நாங்கள் இதை செய்யும் போது, 7 ரூபாய் வைத்து ஏன் பீகாரில் செய்ய முடியவில்லை.
அதை விட்டுவிட்டு, எங்களை கிண்டல் அடிக்காதீர்கள். 29 பைசாவை எப்படி 20 பைசா ஆக்கலாம் என்று யோசிக்காதீர்கள். காலை உணவு தந்து கல்வி தரும் அரசு வேண்டுமா அல்லது நுழைவுத்தேர்வு மூலம் படித்தவனையும் படிக்காதவர் ஆக்கும் அரசு தேவையா?. இவ்வாறு அவர் பேசினார்.