1. Home
  2. தமிழ்நாடு

ஒரு எல்கேஜி மாணவன் கூட இந்த மனிதனுடன் விவாதம் செய்ய மாட்டான் - காயத்ரி ரகுராம்!

Q

மக்களவை தேர்தலில் 6ஆம் கட்ட வாக்குப் பதிவுக்கு முன்னதாக டெல்லியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிரசாரம் மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து செய்தி நிறுவனம் ஒன்றிடம் பேசிய அவர் ஜெயலலிதா குறித்து பேசியது அக்கட்சியினரை ஆத்திரத்தில் ஆழ்த்தியுள்ளது. இது தொடர்பாக பேட்டியில் பேசியிருந்த அண்ணாமலை, “தமிழ்நாட்டில் ஜெயலலிதா மறைவால் ஏற்பட்ட வெற்றிடத்தை பாஜக நிரப்பி வருகிறது. ஜெயலலிதா தனது இந்து அடையாளத்தை காட்டினார். அவர் மிகச்சிறந்த இந்துத்துவா வாதியாக இருந்தார். அதிமுக ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு இந்துத்துவா கொள்கைகளில் இருந்து விலகிச் சென்று விட்டது. இதனால் அதிமுகவுக்கு வாக்களித்த வாக்காளர்கள் பாஜக பக்கம் வந்துவிட்டார்கள். இதனால் பாஜக தமிழகத்தில் பெரிய இடத்தை பிடித்தது என பேசியிருந்தார்.

அண்ணாமலையின் இந்த பேச்சுக்கு அதிமுக தலைவர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். இதற்கு ஜெயலலிதாவின் தோழியாக இருந்த சசிகலா, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஆர்பி உதயகுமார், ஜெயக்குமார் உள்ளிட்டோர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அண்ணாமலையின் கருத்து உண்மைதான் என கூறியிருந்தார் தமிழக பாஜக முன்னாள் தலைவரும், தெலுங்கானாவின் முன்னாள் ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன். அதற்கு பதிலளித்த காங்கிரஸ் எம்பியான திருநாவுக்கரசர், ஜெயலலிதா ஒரு ஆன்மீகவாதி தான். அவர் கடவுளை கும்பிடுவார் அதற்காக அவர் மதவெறி பிடித்தவர் என்று நான் சொல்ல மாட்டேன். தெய்வத்தின் மீது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நம்பிக்கை வைத்திருந்தார்.” என கூறினார்

இந்த சர்ச்சை தொடர்பாக விளக்கமளித்த அண்ணாமலை, “தமிழகத்தின் முன்னாள் முதல்வர் அம்மையார் செல்வி ஜெயலலிதா அவர்களை ஒரு சிறந்த ஹிந்துத்துவவாதி என்று நான் சொன்னதில் என்ன தவறு இருக்கிறது? கர சேவை குறித்து பேசிய ஜெயலலிதா அது தவறு இல்லை எனக் கூறியிருக்கிறார்.. இந்துத்வா என்பது மதம் சார்ந்தது அல்ல.. அது ஒரு வாழ்வியல் முறை.. ஜெயலலிதா இந்துத்துவாவாதி இல்லை எனக் கூறும் அதிமுகவினர் என்னுடன் விவாதம் நடத்த தயாரா?” எனவும் கேள்வி எழுப்பியிருந்தார்.

அண்ணாமலையின் இந்த பேச்சு மீண்டும் அதிமுகவினரை ஆத்திரத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து அறிக்கை, எக்ஸ்பதிவு என அண்ணாமலையை மிகக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர் அதிமுகவினர். இந்நிலையில் அண்ணாமலையுடன் எல்கேஜி மாணவன் கூட விவாதம் நடத்த மாட்டான் என காயத்ரி ரகுராம் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ஒரு எல்கேஜி மாணவன் கூட இந்த முட்டாள் மனிதனுடன் விவாதம் செய்ய மாட்டான். ஒரு முட்டாள் மற்றும் பைத்தியக்காரனுடன் விவாதிப்பது நேரத்தை வீணடிக்கிறது போல” என்று ஒரே வரியில் பதிலளித்துள்ளார். அவரது இந்த பதிவை அதிமுகவினர் அதிக அளவில் பகிர்ந்து வருகின்றனர்.


 

Trending News

Latest News

You May Like