தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை நாளை தொடங்கும்? - இந்தாண்டு மழை எப்படி இருக்கும் ?

தமிழகம் உள்பட தென் மாநிலங்களில் அதிக மழைப் பொழிவைத் தரும் வடகிழக்குப் பருவமழை ஆண்டுதோறும் அக்டோபா் 2 அல்லது 3-ஆவது வாரத்தில் தொடங்குவது வழக்கம். ஆனால், இந்தாண்டு வடகிழக்குப் பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் நா.புவியரசன் கூறியதாவது, இந்தாண்டு வடகிழக்குப் பருவமழை தமிழகம், புதுச்சேரி, ஆந்திரம், ராயலசீமா, தெற்கு கா்நாடகம், கேரளம் ஆகிய பகுதிகளில் அக்டோபா் 28-ஆம் தேதி தொடங்குவதற்கான சாதகமான சூழ்நிலை நிலவுகிறது.
வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் (அதாவது அக்.1 முதல் டிச.31 வரை) தமிழகத்துக்குக் கிடைக்கும் இயல்பான மழை அளவு 946.9 மி.மீ. கடந்த ஆண்டு 905 மி.மீ. மழை பதிவாகியது. இது இயல்பான மழை அளவாக எடுத்துக்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்தாண்டு பொதுவாக இயல்பை விட சற்றுக் குறைவாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதிலும் வட தமிழகத்தில் இயல்பான மழை இருக்கும் என்றும் தென் தமிழக மாவட்டங்களில் இயல்பைவிட சற்றுக் குறைவாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது என அவர் கூறினார்.
newstm.in