1. Home
  2. தமிழ்நாடு

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கியது : குமரி, நெல்லையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு..!

1

சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த வானிலை மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகம், புதுச்சேரி, காரைக்கால், கேரளாவில் வடகிழக்கு பருவமழை (நேற்று) துவங்கியது . கடந்த 24 மணி நேரத்தில் தென் மாவட்டங்களில் ஓரு சில இடங்களிலும், வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது.

அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரத்தில் 7 செ.மீ., மழை பதிவாகி உள்ளது. தென்மேற்கு அரபிக்கடல் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று (அக்.,21) காலை புயலாக வலுப்பெற்றுள்ளது. தேஜ் என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல், தொடர்ந்து தீவிர புயலாகவும், அதனை தொடர்ந்து மிகத்தீவிர புயலாகவும் வலுப்பெறக்கூடும். இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து ஏமன், ஓமன் கடற்கரையை நோக்கி நகரக்கூடும்.

வங்கக்கடல் பகுதியைப் பொறுத்தவரையில், தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி, இன்று (அக்.,22) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். இது முதலில் வடமேற்கு திசையிலும், பிறகு வடகிழக்கு திசையிலும் வங்கதேச கடற்கரையை நோக்கி நகர்ந்து செல்லக்கூடும். மீனவர்கள் அக்.,25 வரை அரபிக்கடல் பகுதிகளுக்கும் அக்.,26 வரை வங்கக்கடல் பகுதிகளுக்கும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆழ்கடலில் இருக்கும் மீனவர்கள் கரைக்கு திரும்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அடுத்த 3 நாட்களை பொறுத்தவரை, தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கனமழையை பொறுத்தவரையில், அடுத்த 24 மணிநேரத்திற்கு நெல்லை, குமரியில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் புறநகரில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வடகிழக்கு பருவமழை இயல்பை ஒட்டி பெய்ய வாய்ப்பு இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Trending News

Latest News

You May Like