இயல்பு வாழ்க்கை பாதிப்பு : தண்ணீரில் தத்தளிக்கும் புதுச்சேரி..!
![1](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/6774b15a0708d7ef9e671db7c9af3b31.png?width=836&height=470&resizemode=4)
புதுச்சேரி அருகே நேற்றிரவு பெஞ்சல் புயல் கரையை கடந்த நிலையில், அங்கு 47 செ.மீ அளவிற்கு அதி கனமழை கொட்டித் தீர்த்துள்ளது. அதிக அளவிலான மழை பொழிந்ததன் காரணமாக, புதுவை முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. அண்ணாநகர் பகுதியில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால் மீட்புப் பணி தொய்வு ஏற்பட்டது.
மீட்புப் பணிக்கு ராணுவத்திற்கு மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்தார். சென்னையில் இருந்து விரைந்த ராணுவ வீரர்கள் 40 பேர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பலத்த காற்று வீசியதன் காரணமாக ஆங்காங்கே மரங்கள் சாய்ந்துள்ளது. போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மாமல்லபுரத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் மழை நின்றாலும், தற்போது காற்றின் வேகம் அதிகமாக உள்ளதால் பாதுகாப்பு கருதி மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
பெஞ்சல் புயல் கரையைக் கடந்ததால் சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய 9 துறைமுகங்களில் ஏற்றப்பட்ட புயல் எச்சரிக்கை கூண்டினை இறக்கிட வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.