கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்பு கூடாது..!
கோடைவிடுமுறை நாள்களில் அனைத்து அரசு, தனியார் பள்ளிகளிலும் எல்லா வகையான பயிற்சிகள், சிறப்பு வகுப்புகள் மற்றும் நிகழ்ச்சிகளை தவிர்த்திடச் செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கோடை காலத்திற்கான வெப்ப அலை குறித்த அறிவிக்கையில், நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில், குறிப்பாக தமிழ்நாடு உள்ளிட்ட தீபகற்பப் பகுதிகளில் மார்ச்சு முதல் மே 2024 வரை அதிகபட்ச வெப்ப நிலை, இயல்பைக் காட்டிலும் கூடுதலாக இருக்கும் என்றும், வெப்ப அலை வீசும் நாட்களின் எண்ணிக்கையும் கூடுதலாக இருக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த ஏப்ரல் மாதத்தில், வட தமிழ்நாட்டின் உட்பகுதிகளில் அதிகபட்ச வெப்ப நிலை, இயல்பைக் காட்டிலும் 3-50 C வரை அதிகமாக பதிவாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, வெப்ப அலையின் தாக்கத்தின் காரணமாக ஏற்படக் கூடிய பாதிப்புகளை குறைத்திட மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஏற்கனவே எனது தலைமையிலும், கூடுதல் தலைமைச் செயலாளர் / வருவாய் நிருவாக ஆணையர் அவர்கள் தலைமையிலும் பல் துறை அலுவலர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களின் கூட்டம் நடத்தப்பட்டு, அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், எதிர்வரும் 16.5.2024 முடிய தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் 36-400 C வரை அதிகபட்ச வெப்பம் பதிவாகக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எனவே தமிழ்நாட்டில் பெரும்பான்மையான இடங்களில் கடுமையான வெப்பமும், வெப்ப அலைக்கு நிகரான பருவநிலையும் நிலவி வருவதால், பொதுமக்கள் வெப்பம் சார்ந்த நோய்களால் பாதிக்கக் கூடிய சூழ்நிலை உள்ளது. வெப்ப அலையின் தாக்கத்திலிருந்து சிறுவர், சிறுமியரின் நலனை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் கருதி, கோடை விடுமுறை நாட்களில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் எல்லா வகையான பயிற்சிகள், சிறப்பு வகுப்புகள் மற்றும் நிகழ்ச்சிகள் போன்றவற்றை தவிர்த்திட வேண்டும். இதனை உறுதி செய்ய அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டு அரசின் இன்றைய செய்திக்குறிப்பு ஒன்றில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.