ஊட்டி, கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகளுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை - சென்னை ஐகோர்ட்..!

ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட மலை வாசஸ்தலங்களில், எத்தனை சுற்றுலா வாகனங்களை அனுமதிக்கலாம் என்பது தொடர்பாக, சென்னை ஐ.ஐ.டி., மற்றும் பெங்களூரு ஐ.ஐ.எம்., கல்வி நிறுவனங்கள் ஆய்வு செய்து வருகின்றன.
இந்த ஆய்வுகள் நிறைவு பெற கால தாமதமாகும் என்பதால், கோடை விடுமுறையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில், ஊட்டி மற்றும் கொடைக்கானலில் சுற்றுலா வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதித்து, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்ரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வு உத்தரவு பிறப்பித்தது.
ஊட்டிக்குள் வார நாட்களில், 6,000 வாகனங்கள், வார இறுதி நாட்களில் 8,000 வாகனங்கள்; கொடைக்கானலில் வார நாட்களில் 4,000, வார இறுதி நாட்களில் 6,000 வாகனங்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.
இந்த வாகன கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஊட்டியில் கடையடைப்பு போராட்டம் நடந்தது.
இந்நிலையில், வாகன கட்டுப்பாடு விதித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
வன பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை, நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது. அப்போது, கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஆஜராகி, ''ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்லும் வாகனங்களுக்கான கட்டுப்பாடு குறித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி, அரசு தரப்பில் தாக்கல் செய்த மனுவை இன்று விசாரிக்க வேண்டும்,'' என்று கோரிக்கை விடுத்தார்.
இதன்படி இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ' ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., ஆய்வுக்கு பிறகு எத்தனை வாகனங்களை அனுமதிக்கலாம் ,' என தெரிவித்தார்.
இதனையடுத்து நீதிபதிகள், ' ஊட்டி, கொடைக்கானல் வரும் பயணிகளுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. இந்த மனு ஏப்.,8 ல் விசாரிக்கப்படும்' எனத் தெரிவித்தனர்