பதவி வெறி இல்லை, ஆனால்…! – அன்புமணி ராமதாஸ் டார்கெட் இதுதான்!!
பாட்டாளி மக்கள் கட்சியின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் 2021ஆம் ஆண்டுக்கு விடை கொடுப்போம், 2022ஆம் ஆண்டை வரவேற்போம்'' என்ற தலைப்பில் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றது.
அதில் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி, இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய ஜி.கே.மணி, 40 ஆண்டுகால உழைப்பால் பாமக ஆலமரமாய் உயர்ந்து நிற்கிறது என்று கூறினார்.
40 ஆண்டுகால உழைப்பை இன்னும் நான்கு ஆண்டுகளில் நாம் எட்டிப்பிடிக்க வேண்டும். 2026இல் பாமக ஆட்சியைப் பிடிக்கும் என்ற நம்பிக்கை இராமதாஸூக்கு இருக்கிறது, அதற்காக நாம் கடுமையாக உழைப்போம் என்று தெரிவித்தார்.
அவரை தொடர்ந்து பேசிய, அன்புமணி ராமதாஸ், முதலமைச்சராக வரவேண்டுமென பதவி வெறி இல்லை, ஆனால் தமிழகத்தை பாமக ஆள வேண்டும். வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீட்டை நிச்சயம் அடைவோம் என்று கூறினார்.
கட்சி தொடங்கிய 18ஆண்டுகளில் திமுக ஆட்சிக்கு வந்தது. தொடங்கப்பட்ட 5 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியைப் பிடித்தது. பாமக தொடங்கி 32 ஆண்டுகள் ஆகியும் நம்மால் ஆட்சியை பிடிக்க முடியவில்லை. இனியும் இப்படியே இருந்து விடமுடியாது என பேசினார்.
எடப்பாடி மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. நான்காண்டுகள் எளிமையான முதல்வராக இருந்தார்.பல்வேறு எதிர்ப்புகளை மீறி வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுத்தார் என்று கூறினார். அடுத்த முறை மக்கள் திமுகவுக்கு வாக்களிக்க மாட்டார்கள் நமக்கு மிகப்பெரிய வாய்ப்பு உள்ளது என நம்பிக்கை தெரிவித்தார்.
newstm.in