இப்படி ஒரு நிலைமை யாருக்கும் வர கூடாது..! கடனை அடைக்க மகனை ரூ.9000க்கு விற்ற தாய்!
பீகார் மாநிலத்தில பச்சிரா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் முகமது ஹரூன். இவரது மனைவி பெயர் ரெஹானா. இந்த தம்பதிக்கு மொத்தம் 8 குழந்தைகள். 5 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர். முகமது ஹரூன், ரெஹானா தம்பதியினர் தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் ரூ.50,000 கடன் வாங்கியதாக தெரிகிறது.
நாளடைவில் இந்த கடன் தொகையை அவர்கள் செலுத்தாமல் விட்டுள்ளனர். இதையடுத்து நிதி நிறுவன ஊழியர்கள் ஹரூன் தம்பதியை அணுகி, பணத்தை செலுத்துமாறு தொடர்ந்து நிர்பந்தம் செய்ததாக தெரிகிறது. ஒருகட்டத்தில் நெருக்கடி முற்றவே, தமது குழந்தைகளில் ஒன்றை விற்று கடனை அடைத்து விடலாம் என்று நினைத்துள்ளனர்.
இதன்பின்னர், ரெஹானா, தமது சகோதரர் தன்வீர் என்பவரை அணுகி தமது ஒன்றரை வயது ஆண் குழந்தையை விற்க ஏற்பாடு செய்யுமாறு கூறி உள்ளார். அவரும் அதே பகுதியில் இருந்த ஆரிப் என்பவரிடம் குழந்தையை 45,000 ரூபாய்க்கு விற்றுள்ளார். ஆனால் வெறும் 9,000 ரூபாய் மட்டுமே ரெஹானா தம்பதிக்கு தன்வீர் தந்துள்ளதாக தெரிகிறது.
இந்த விவரங்கள் அனைத்தும் அறிந்த போலீசார், உடனடியாக களத்தில் இறங்கினர். முகமது ஹரூன்-ரெஹானா தம்பதியிடம் விசாரணை நடத்தி, குழந்தை இருக்கும் இடத்தை கண்டறியும் முயற்சியில் இறங்கினர். அதன்படி ஆரிப் வீட்டில் இருந்த குழந்தையை மீட்ட போலீசார், பெங்களூருவில் உள்ள ஒருவருக்கு ரூ.2 லட்சத்துக்கு விற்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்ததையும் கண்டுபிடித்தனர்.
இந்த சம்பவத்தில் தொடர்புடையை அனைவரையும் பிடித்துள்ள போலீசார், வேறு யாருக்கேனும் சம்பந்தம் உள்ளதா என விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.