1. Home
  2. தமிழ்நாடு

தமிழ்நாட்டில் யாரும் மதுவை கட்டாயமாக குடிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தவில்லை - துரை வைகோ..!

1

மதுரையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் திருச்சி மதிமுக எம்.பி. துரை வைகோ கலந்து கொண்டார். முன்னதாக, விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது:

ஆம்ஸ்ட்ராங்கின் கொலை கண்டிக்கத்தக்க ஒரு செயல். காவல்துறை மற்றும் தமிழக அரசு இதுபோன்ற செயல்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். இது ஒருபுறம் இருக்க, ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக கைதானவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை என்று பலர் கூறுகிறார்கள். இந்தக் கொலை அரசியல் காரணங்களுக்காக நடைபெற்றதா அல்லது தனிப்பட்ட விரோதமா என்பது குறித்து போலீஸார் நேர்மையான முறையில் விசாரித்து உண்மையை வெளிப்படுத்த வேண்டும்.

தமிழகம் கலவர பூமியாக மாறி வருவதாக பாஜகவினர் கூறுகிறார்கள். பாஜக ஆளும் மாநிலங்களில் இதை விட மோசமான சம்பவங்கள் நடைபெறுகின்றன. அதனால் இந்த விவகாரத்தில் அரசியல் செய்வதை விட்டுவிட்டு, இந்த சம்பவத்தின் பின்னால் உள்ள உண்மையை வெளிக்கொணர்வதற்கு உதவி செய்ய வேண்டும். ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கைது செய்து சட்டத்தின் முன்பு அரசு நிறுத்த வேண்டும். அதுதான் அவருக்கும், அவரது குடும்பத்துக்கும், அவரது கட்சியினருக்கும் நாம் கொடுக்கும் நீதியாக இருக்க முடியும். அதே நேரத்தில், அரசியல் தலைவர்கள் மீது இனி இதுபோன்ற தாக்குதல் நடைபெறாமல் அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என துரை வைகோ கூறினார்.

முன்னதாக, தமிழகத்தில் மதுவிலக்கு கொண்டு வர வேண்டும் என எதிர்க்கட்சிகள் கூறுகிறார்களே என நிருபர் ஒருவர் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த துரை வைகோ, "பூரண மதுவிலக்கு அமலில் உள்ள குஜராத்தில் கள்ளச்சாராய மரணங்கள் நிகழத் தான் செய்கின்றன. மது குறித்து மக்களுக்கு தான் விழிப்புணர்வு வேண்டும். மதுவை யாரும் இங்கு கட்டாயப்படுத்தி குடிக்க வைப்பதில்லை. மதுக்கடைகளை மக்கள் புறக்கணிக்கும் போது, அதற்கு உண்டான முடிவை இயற்கையே தந்துவிடும்" என துரை வைகோ கூறினார்.

Trending News

Latest News

You May Like