விதியை யாராலும் மாற்ற முடியாது. அனைவரும் ஒரு நாள் இறக்க நேரிடும் - போலே பாபா சாமியார் சர்ச்சை பேச்சு..!
உத்தர பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டம் சிக்கந்தரராவ் தாலுகாவின் முகல்கடி கிராமத்தில் ஜுலை 2-ம் தேதி நடைபெற்ற மதவழிபாடு, ஆன்மிக சொற்பொழிவுக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டது. இதில், 112 பெண்கள் உட்பட 121 பேர் பலியாகினர். பலர் இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டனர். இதற்கு காரணமாகக் கருதப்படும் போலே பாபா சாமியார் பெயர் முதல் தகவல் அறிக்கையில் இல்லை.
இதற்கிடையே, ஹாத்ரஸ் நெரிசல் சம்பவம் தொடர்பாக முதல்முறையாக ஊடகங்கள் முன் தோன்றி பேட்டியளித்துள்ளார் போலே பாபா. உத்தர பிரதேசத்தின் காஸ்கஞ்ச் மாவட்டத்தில் பேசிய அவர், “ஹாத்ரஸ் நெரிசல் சம்பவத்தால் நான் மிகவும் கவலையடைந்துள்ளேன். அந்தச் சம்பவத்துக்கு பிறகு நான் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளானேன். ஆனால், விதியை யாராலும் மாற்ற முடியாது. அனைவரும் ஒரு நாள் இறக்க நேரிடும்.
நெரிசல் சம்பவம் நடைபெற்ற போது சுமார் 15 -16 பேர் முகத்தை மூடிய படி கூட்டத்தில் இருந்தனர். அவர்கள் நச்சு வாயுவை கூட்டத்தில் தெளித்துவிட்டு காரில் தப்பிச் சென்றனர் என எங்கள் வக்கீல் கூறியது முற்றிலும் உண்மை. அவர் கூறியது போல் கண்டிப்பாக சதி நடந்துள்ளது.
சனாதனம், சத்தியத்தின் அடிப்படையில் செயல்படும் எனது அமைப்பை சிலர் அவதூறு செய்ய முயற்சிக்கின்றனர். விசாரணை கமிஷன் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. உண்மை வெளிவரும் மற்றும் சதி அம்பலப்படுத்தப்படும் என்று நாங்கள் நம்புகிறோம். நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் உடன் நாங்கள் துணை நிற்கிறோம்” என்று தெரிவித்தார்.