இனி பட்டமளிப்பு விழாவின்போது கருப்பு நிற உடை அணிய தேவையில்லை..!
மருத்துவ மாணவர்கள் பட்டமளிப்பு விழாவின்போது இனி கருப்பு நிற உடை அணிய தேவையில்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், தனது கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அனைத்து மருத்துவ கல்லூரிகள் மற்றும் மருத்துவ கல்வி நிறுவனங்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
பட்டமளிப்பு விழாவின்போது கருப்பு நிற உடை அணிவது ஐரோப்பிய நாடுகளில் தொடங்கிய கலாசாரம் எனவும், இந்த நடைமுறையானது ஆங்கிலேயர்களால் தங்கள் காலனி ஆதிக்க நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டது எனவும் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
எனவே, இந்த காலனி ஆதிக்க நடைமுறை மாற்றப்பட வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. இனி பட்டமளிப்பு விழாவில் கருப்பு நிற உடைக்கு பதிலாக இந்திய பாரம்பரிய உடைகளை அணிந்து கொள்ளலாம் எனவும், மருத்துவ கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ள மாநிலத்தின் பாரம்பரியத்திற்கு ஏற்ப பட்டமளிப்பு விழாவிற்கான உடையை நிர்ணயித்துக் கொள்ளலாம் எனவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.