1. Home
  2. தமிழ்நாடு

யார் என்ன செய்தாலும் எனது எழுச்சிப் பயணம் நிற்காது : எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்!

1

மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப் பயணம் தொடங்கிவிட்டார்.

மேற்கு மாவட்டங்களில் முடித்த கையோடு வட மாவட்டங்கள் மற்றும் டெல்டா பகுதிகளில் சுற்றுப் பயணத்தை நடத்தி முடித்தார். குறிப்பாக திமுக அரசை கடுமையாக சாடி வந்த எடப்பாடி பழனிசாமி, சமீபத்தில் விசிக, கம்யூனிஸ்டுகள் என கூட்டணி கட்சிகளையும் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். இதற்கு திமுக தரப்பில் இருந்து கே.என்.நேரு காட்டமாக பதில் அளித்திருந்தார். அதாவது சம்பந்தியைக் காப்போம், மகனைப் காப்போம் என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமி சுற்றுப் பயணம் செய்யலாம் என்றும், கூட்டணி ஆட்சி என்னும் அமித்ஷாவுக்கே பதில் சொல்ல முடியாத எடப்பாடி பழனிசாமி, திமுக கூட்டணிக் கட்சிகளைப் பற்றி பேசலாமா எனவும் விமர்சித்திருந்தார்.

இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற எனது முதற்கட்ட சுற்றுப் பயணத்தை எழுச்சிப் பயணமாக அதனை வெற்றிப் பயணமாக மாற்றியதில் முழுப் பங்கும் மக்களுக்கு உள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் ஜூலை 7ஆம் தேதி தொடங்கிய எனது பயணம் திருத்துறைப்பூண்டி வரை தொடர்ந்துள்ளது. கோவை, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் உள்ள 31 சட்டமன்றத் தொகுதிகளில் சுமார் 12.5 லட்சம் மக்களை சந்தித்துள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த 52 மாதகால மக்கள் விரோத ஸ்டாலின் மாடல் பெயிலியர் ஆட்சியில் மக்கள் தாங்கள் சந்தித்த வேதனைகளை எடுத்து வைத்ததாக குறிப்பிட்ட எடப்பாடி பழனிசாமி, நீங்கள் எங்கள் வீட்டுப் பிள்ளை, உங்களை சந்தித்தது ஆறுதல், எங்கள் வேதனைகளுக்கு விடிவுகாலம் வந்துவிட்டது என்று கூறி என்னை அன்பில் நெகிழச் செய்துவிட்டனர். குறிப்பாக விழுப்புரத்தில் ஒரு தாய் நீங்கள் எப்போது முதல்வராக வருவீர்கள் என்று கேட்ட தருணத்தில், 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவின் வெற்றி உறுதி செய்யப்பட்டதாகவே உணர்ந்தேன் என்று குறிப்பிட்டார்.

மேலும், “இந்த பயணம் எனக்கு உணர்த்தியது ஒன்றே ஒன்றுதான். ஸ்டாலின் மாடல் பெயிலியர் அரசு பல பொய்களைக் கூறி மக்களை மடைமாற்றம் செய்து வஞ்சித்துக்கொண்டே உள்ளது. உங்களுடன் நான் - எங்களுடன் நீங்கள் என்றெல்லாம் சொல்லி தனது பித்தலாட்டத்தைத் தொடர்கிறது. மக்கள் நலனை தள்ளிவைத்துவிட்டு கொள்ளையடிப்பதில் மட்டுமே ஸ்டாலினும் அவரது அமைச்சரவை சகாக்களும் குறியாக உள்ளனர்.

கே.என்.நேரு எனது எழுச்சிப் பயணத்தை தவறாக சித்தரித்து சம்பந்தியை மீட்போம், சம்பாதித்த பணத்தை காப்போம் என்றெல்லாம் என் மீது அவதூறு பரப்பியுள்ளார். அமைச்சர் நேருவை விட்டு அறிக்கை என்ற பெயரில் ஸ்டாலின் ஆழம் பார்த்துள்ளார். ஆனால், மருமகனைக் காப்போம் - மகனைக் காப்போம் என்றெல்லாம் அவர்களின் எண்ணத்தைக் கூறும் விதமாகவே நேருவின் அறிக்கை உள்ளது. திமுக என்ன மடைமாற்றம் செய்தாலும் சரி எனது எழுச்சிப் பயணம் தொடரும். 2026ஆம் ஆண்டு திமுக அரசு அமோக வெற்றிபெற்று மக்கள் எண்ணத்தை நி்றைவேற்றும் வகையில் நல்லாட்சி தருவோம்.தவறு செய்த ஆட்சியாளர்கள் தக்க பதில் சொல்ல வேண்டிய நிலை வரும்” என்றும் காட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.

Trending News

Latest News

You May Like