இனி கிரிமினல் வழக்கு நிலுவையில் இருந்தால் பாஸ்போர்ட் பெற முடியாது - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி..!
வன்கொடுமை தடுப்புச்சட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த தமிழரசன் என்பவர் வெளிநாடு செல்ல பாஸ்போர்ட் கோரிய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து, தனக்கு பாஸ்போர்ட் வழங்கும்படி, சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு உத்தரவிடக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனு, நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் விசாரணைக்கு வந்தது.அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 'மனுதாரருக்கு எதிராக இரண்டு வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்குகளை, மங்கலம்பேட்டை போலீசார் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்குகளில் ஒன்று, சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. எனவே, மனுதாரருக்கு பாஸ்போர்ட் வழங்க உத்தரவிட வேண்டும்' என்றார்.
போலீஸ் சார்பில், அரசு குற்றவியல் வழக்கறிஞர் எஸ்.வினோத்குமார் ஆஜராகி, ''மனுதாரருக்கு எதிரான வழக்கில், சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது. ஆவணங்களில் குற்ற வழக்கு விபரங்களை மறைத்து, பாஸ்போர்ட் கோரி விண்ணப்பித்துள்ளார்.
''அவரது ஆவணங்களில் கூறப்பட்ட தகவல் உண்மையல்ல என, மண்டல பாஸ்போர்ட் அதிகாரி கண்டறிந்தால், சம்பந்தப்பட்டவர் மீது, பாஸ்போர்ட் சட்டப்படி கிரிமினல் நடவடிக்கை எடுக்க முடியும். குற்றம் நிரூபிக்கப்பட்டால், இரண்டு ஆண்டு சிறை அல்லது 5,000 ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்,'' என்றார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
வெளிநாடு சென்று வேலை செய்ய, மனுதாரர் பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்துள்ளார். குற்ற வழக்கு நிலுவையில் இருக்கும் போது, பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்துள்ளது தெரிகிறது. கிரிமினல் வழக்கு நிலுவையில் இருக்கும் போது, பாஸ்போர்ட் கோரி உயர் நீதிமன்றத்தை அணுகுகின்றனர். இதை அனுமதித்தால், அது குற்ற வழக்குகளின் விசாரணைக்கு தடையாக அமையும்.
மனுதாரர், சம்பந்தப்பட்ட விசாரணை நீதிமன்றத்தில் உள்ள வழக்கை சந்தித்து, அந்த தீர்ப்பின் அடிப்படையில் பாஸ்போர்ட் பெற உரிமை உள்ளது; வழக்கு நிலுவையில் இருந்தால், விசாரணை நீதிமன்றத்தை அணுகலாம். குற்ற வழக்கு நிலுவையில் இருக்கும் போது, பாஸ்போர்ட் கோரி விண்ணப்பிக்க முடியாது. எனவே, இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.