ஹைட்ரோ கார்பன் எடுக்க எந்த உரிமமும் வழங்கப்படவில்லை : தமிழக அரசு..!

காவிரி டெல்டா பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை அமல்படுத்த தடை விதிக்கக் கோரி கடந்த 2019-ம் ஆண்டு மார்க்ஸ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கப்பூர்வலா, நீதிபதி மரகத சக்ரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மத்திய பெட்ரோலிய துறை செயலாளர் மற்றும் வேளான் துறை செயலாளர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தமிழக அரசு உரிமம் வழங்காத காரணத்தால், காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஒதுக்கப்பட்டிருந்த இடத்தில் எந்த பணியும் துவங்கப்படவில்லை என்றும், கடந்த 2020-ம் ஆண்டு தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளான் மண்டலங்கள் மேம்பாட்டு சட்டத்தை தமிழ்நாடு அரசு இயற்றி இருக்கிறது.
அந்த சட்டத்தின் படி பாதுகாக்கப்பட்ட வேளான் மண்டலங்களில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. காவிரி டெல்டா பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்க எந்த உரிமமும் வழங்கப்படவில்லை என்று தமிழக அரசு சார்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கில் மேற்கொண்டு எந்த உத்தரவும் பிறப்பிக்க தேவையில்லை என்று கூறி அந்த வழக்கை முடித்து வைத்தனர்.