இன்று மாலை 5 மணி வரை எந்த விமானங்களும் இயக்கப்படாது..!
பெஞ்சல் புயல் தற்போது வங்கக்கடலில் சென்னைக்கு தென்கிழக்கே 190 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுச்சேரிக்கு 180 கிலோமீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. புதுச்சேரிக்கு அருகே காரைக்கால்- மாமல்லபுரம் இடையே இன்று கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நேற்றிரவு முதல் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. மாமல்லபுரம் அதன் சுற்று வட்டார பகுதியான பூஞ்சேரி, கிழக்கு கடற்கரை சாலை ஆகிய பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
சென்னை அடையாறு, பெசன்ட் நகர், திருவான்மியூர் உள்ளிட்ட கிழக்கு கடற்கரை சாலை ஒட்டியுள்ள பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. கனமழை பெய்து வருவதால் மோசமான வானிலை நிலவுகிறது. சென்னைக்கு சிங்கப்பூர், திருச்சி, மங்களூரு உள்பட பல பகுதிகளில் இருந்து வரும், 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் கனமழை பெய்து வருவதால், சென்னை விமான நிலையம் வந்த ஏராளமான விமானங்கள் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரம் வானில் வட்டமடித்தன. இதே நிலை தொடர்ந்து நீடித்து வருவதால், வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
மதுரை, திருச்சி, சேலத்தில் இருந்து சென்னை வரும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது என இண்டிகோ விமான நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதேபோல் சென்னையில் இருந்து இன்று எந்த விமானங்கள் இயக்கப்படாது என இண்டிகோ விமான நிர்வாகம் அறிவித்துள்ளதால் பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர்.
சென்னை விமான நிலையத்தில் இன்று (நவ.,30) மாலை 5 மணி வரை எந்த விமானங்களும் இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டு உள்ளது.