குடும்பப் பிரச்சினையோ காரணம் இல்லை: மருத்துவக் காரணங்களால்தான் டி.ஐ.ஜி. விஜயகுமார் தற்கொலை..!
தற்கொலை செய்து கொண்ட டி.ஐ.ஜி. விஜயகுமார் உடலுக்கு சட்டம் - ஒழுங்கு ஏடிஜிபி அருண் அஞ்சலி செலுத்தினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "டி.ஐ.ஜி. விஜயகுமார் 2009ம் ஆண்டு ஐபிஎஸ் பிரிவைச் சேர்ந்தவர். ஐபிஎஸ் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு முன்பாக 2003ம் ஆண்டு முதல் தமிழக காவல் துறையில் டிஎஸ்பியாக 6 வருடம் பணிபுரிந்து பின்பு யுபிஎஸ்சி தேர்வு எழுதி ஐபிஎஸ் ஆக தேர்வு செய்யப்பட்டு பணியில் சேர்ந்தவர். மிகவும் திறமையான அதிகாரி. எனக்கு அவரை நன்றாகத் தெரியும். மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றியவர். பல்வேறு நிலைகளில் பணி புரிந்து எல்லா இடங்களிலும் பாராட்டுகளைப் பெற்றுள்ளார்.
டி.ஐ.ஜி. விஜயகுமார் தற்கொலை தொடர்பான முதல் கட்ட விசாரணையில், சில வருடங்களாக அவர் மன அழுத்தத்தில் இருந்துள்ளார் என்பதும் அதற்காக சிகிச்சை பெற்று வந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவரிடமும் நான் காலையில் பேசினேன். நான்கு நாட்களுக்கு முன்பாக மன அழுத்தம் அதிகமாக உள்ளதாக மருத்துவரிடம் தெரிவித்துள்ளார்.
கோவையில் உள்ள ஆணையர் மற்றும் ஐஜி ஆகியோர் தொடர்ந்து அவருக்கு கவுன்சிலிங் அளித்துக்கொண்டு தான் இருந்தனர். மருத்துவ காரணங்களால் இந்த மரணம் நிகழ்ந்துள்ளது. காவல் துறையில் மன அழுத்ததைக் குறைக்க தொடர்ந்து கவுன்சிலிங் அளிக்கப்பட்டு வருகிறது. டி.ஐ.ஜி. விஜயக்குமார் தற்கொலைக்கு பணிச்சுமையோ, குடும்பப் பிரச்சனையோ காரணம் இல்லை. மருத்துவ காரணங்களால் மட்டுமே இந்த தற்கொலை நிகழ்ந்துள்ளது" என தெரிவித்துள்ளார்.