1. Home
  2. தமிழ்நாடு

நோ டெய்லி சர்வீஸ்...இனி இந்த நாட்களில் மட்டுமே திருவண்ணாமலைக்கு பேருந்துகள் இயக்கம்..!

1

தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் இருந்து வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில் வெளியூருக்கு செல்லும் மக்களின் வசதிக்காக சிறப்புப் பேருந்துகள் விடப்படும்.

தீபாவளி, பொங்கல், கோவில் திருவிழாக்களிலும் பொதுமக்களுக்காக சிறப்புப் பேருந்துகள் ஓடும். இந்நிலையில், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இனி திருவண்ணாமலைக்கு பேருந்துகள் இயக்கப்படும் என தகவல்கள் வெளியான நிலையில், தற்போது வெள்ளி, சனி ஆகிய வார இறுதி நாட்கள் மற்றும் விசேஷ நாட்களில் மட்டும் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து திருவண்ணாமலைக்கு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது, "தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (விழுப்புரம்) மூலமாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து திருவண்ணாமலைக்கு பேருந்துகள் தற்பொழுது இயக்கப்பட்டு வருகிறது.

மேற்படித் தடங்களில் குறிப்பாக திருவண்ணாமலை செல்லும் பயணிகள் பெரும்பாலானவர்கள் கோயம்பேடு மார்க்கெட் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பணி செய்து வருவதால் அவர்கள் திருவண்ணாமலை தட பேருந்துகளை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இயக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இந்த நிலையில் மேற்கண்ட கோரிக்கையின் அடிப்படையில் 23.5.2024 முதல் திருவண்ணாமலைக்கு சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அவற்றில் தற்போது மாற்றம் செய்யப்பட்டு 24.5.2024 முதல் ஒவ்வொரு வாரமும் வெள்ளி, சனி ஆகிய வார இறுதி நாட்கள் மற்றும் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமியை முன்னிட்டும் பரிசோதனை முறையில் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து காஞ்சிபுரம் வந்தவாசி வழியாக இயக்கப்பட்டு வரும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளும் மற்றும் ஆற்காடு ஆரணி வழியாக திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

எனவே பயணிகள் மேற்படி பேருந்து வசதியை பயன்படுத்தி கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது" இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like