9வது முறையாக வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை!
ரெப்போ விகிதம் என்பது மற்ற வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் கடனுக்கான வட்டி விகிதம் ஆகும். இந்த ரெப்போ வட்டி விகிதத்தில் 2023ம் ஆண்டு பிப்ரவரி முதல் தொடர்ந்து 9வது முறையாக மாற்றம் செய்யப்படவில்லை. அது 6.5 சதவீதமாகவே நீடிப்பதாக ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். இதனால் வீடு, வாகனம் மற்றும் தனிநபர் கடன்களுக்கான வட்டி உயராது.
ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை கூட்டத்திற்கு பிறகு அந்த வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறியதாவது: ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. அது 6.5 சதவீதமாகவே நீடிக்கிறது. உள்நாட்டுப் பொருளாதார நடவடிக்கைகள் தொடர்ந்து நல்ல நிலையில் உள்ளன. அமெரிக்க பொருளாதார சூழல், மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் ஆகியவை கண்காணிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.