நீர்வரத்து அதிகரித்து வருவதால் குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை!
தமிழ்நாடு முழுவதும் கடந்த மாதம் வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. அதைத்தொடர்ந்து, தற்போது அவ்வப்போது மழையுடன் இதமான சூழல் நிலவி வருகிறது. தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம் அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வருகை தந்தனர். குற்றாலம் அருவியில் விழும் நீர் பல்வேறு மூலிகைகள் கலந்து வருவதால் இதில் நீராடுவது ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது. எனவே சீசன் காலங்கள் மட்டுமல்லாது சாதாரண நாட்களில் கூட குற்றாலம் அருவிகளில் கூட்டம் அலைமோதுவது வழக்கம். தற்போது சீசன் நேரம் என்பதால் வெளி மாநிலங்களிலும் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து கொண்டிருக்கின்றனர். மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில், கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால், குற்றாலத்தில் இதமான சூழல் நிலவியது. குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றாலம் அருவி மற்றும் ஐந்தருவியில் தண்ணீர் சீராகக் கொட்டியது. இதன் காரணமாக, சுற்றுலாப் பயணிகள் குற்றாலத்திற்கு அதிகளவில் வருகை தந்தனர். வரிசையில் காத்திருந்து உற்சாக குளியல் போட்டுச் சென்றனர்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. தென்காசி மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதைத்தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றால அருவி, ஐந்தருவி மற்றும் புலி அருவியில் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் பழைய குற்றாலம் அருவியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் பள்ளி மாணவர் ஒருவர் அடித்துச் செல்லப்பட்டு பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.