புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடையில்லை.. சென்னை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு..!

புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கக்கோரி, கரிகாலம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ஜெகன்நாதன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அந்த மனுவில், கொரோனா ஊரடங்கு தாக்கத்தில் இருந்து மீண்டுவரும் நிலையில், அடிப்படை கள நிலவரத்தை கருத்தில் கொள்ளாமல் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி அளித்துள்ளதாகவும், ஏற்கெனவே யூனியன் பிரதேசத்தில் இருவர் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் புதுச்சேரியில் குவிந்து வருவதால், அண்டை மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனவும் கோரியிருந்தார்.
நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வில் ஆஜரான மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் ஞானசேகர், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என முறையிட்டிருந்தார். இதேபோல, வழக்கறிஞர் ஸ்ரீதர் என்பவரும் ஆஜராகி முறையிட்டார். முறையீடுகளை ஏற்ற நீதிபதிகள், இன்று பிற்பகல் வழக்கை விசாரிப்பதாக ஒப்புதல் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் வழக்கு தற்போது விசாரணைக்கு வந்தபோது, புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை இல்லை என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதேசமயம், டிசம்பர் 31ம் தேதி இரவு 10 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை மதுபான விற்பனைக்கு தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.