இந்தியா மீது கூடுதல் வரி விதிக்கப்படாது - டிரம்ப் திட்டவட்டம்..!
அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் ஆங்கரேஜ் நகரில் எல்மென்டார்ப்-ரிச்சர்ட்சன் கூட்டு ராணுவ படை தளத்தில் நேற்று(15-ந்தேதி) அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் ரஷிய அதிபர் புதின் நேரில் சந்தித்து பேசினர். சுமார் 3 மணி நேரத்திற்கு பின்னர் இந்த பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தது.இந்த பேச்சுவார்த்தையில் சுமூகமான தீர்வு எட்டப்படாவிட்டால், ரஷியாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு மேலும் கூடுதலாக வரி விதிக்கப்படலாம் என அமெரிக்க அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதன் பின்னர் இருவரும் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது பேசிய புதின், “எங்களுக்கு இடையே நடந்த போர்நிறுத்தம் பற்றிய பேச்சுவார்த்தையின் மூலம் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது. எங்களுக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தை உக்ரைனில் அமைதியை கொண்டு வரும் என நம்புகிறேன். அடுத்த முறை மாஸ்கோவில் பேச்சுவார்த்தை நடைபெறும்” என்றார்.
தொடர்ந்து பேசிய டிரம்ப், “மாஸ்கோவில் பேச்சுவார்த்தை நடத்தும் திட்டம் சுவாரஸ்யமானது. அது நிச்சயம் நடைபெறும் என நான் நம்புகிறேன். போரை நிறுத்தும் முடிவு ஜெலன்ஸ்கி கையில்தான் உள்ளது. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை அழைத்து இந்த சந்திப்பு பற்றி அவரிடம் பேசுவேன்” என்று தெரிவித்தார்.மேலும் இந்தியா மீது கூடுதல் வரி விதிக்கப்படாது என டிரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். முன்னதாக புதினை சந்திக்க செல்லும் முன்பு விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “ரஷியாவிடம் இருந்து அதிக அளவில் எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடாக இந்தியா இருக்கிறது. சீனாவும் அதிக அளவில் எண்ணெய் இறக்குமதி செய்கிறது. இந்த நாடுகள் மீது நான் கூடுதல் வரி விதித்தால், அது ரஷியாவுக்கு பெரிய இழப்பை ஏற்படுத்தலாம். அதை செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டால் நான் செய்வேன். ஆனால் தற்போது அவ்வாறு வரி விதிக்கப்பட வாய்ப்பு இல்லை என்று கூறலாம்” என்றார்.