முழங்காலில் நடந்து சென்று திருப்பதி கோயிலில் இந்திய வீரர் நிதிஷ் ரெட்டி சாமி தரிசனம்..!

பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியான 4ஆவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் நிதிஷ் குமார் ரெட்டி அதிரடியாக விளையாடி டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் சதம் அடித்து சாதனை படைத்தார். இந்தப் போட்டியில் அவர் 189 பந்துகளில் 11 பவுண்டரி, ஒரு சிக்சர் உள்பட 114 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். 2ஆவது இன்னிங்ஸில் 1 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். எனினும் இந்தப் போட்டியில் இந்திய அணி 184 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இந்த தொடரில் 5 போட்டிகளில் விளையாடிய நிதிஷ் குமார் ரெட்டி 298 ரன்கள் எடுத்தார். இந்த தொடரில் அதிக ரன்கள் எடுத்த 2ஆவது இந்திய வீரர் என்ற சாதனையை இவர் படைத்தார்.
இந்த நிலையில் தான் ஆஸ்திரேலியாவிலிருந்து இந்திய அணி வீரர்கள் நாடு திரும்பினர். இதில், கடந்த சில தினங்களுக்கு முன்பு விசாகப்பட்டினம் வந்த நிதிஷ் குமார் ரெட்டிக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதையடுத்து நேற்று திருப்பதி கோயிலுக்கு சென்ற நிதிஷ் குமார் ரெட்டி, முட்டி போட்டபடி படியேறி சென்று திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.