நாளை மறுநாள் போடி மெட்டு-மூணாறு நெடுஞ்சாலையை திறந்து வைக்கிறார் நிதின் கட்கரி..!
தேனி மாவட்டத்தை கேரளாவுடன் இணைக்கும் தனுஷ்கோடி-கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஏராளமான சுற்றுலா வாகனங்கள், தோட்ட தொழிலாளர்கள் செல்லும் ஜீப்கள், அத்தியாவசிய தேவைக்காக செல்லும் லாரிகள், அரசு, தனியார் பஸ்கள் சென்று வருகின்றன. கேரளாவுக்கு குமுளி, கம்பம் மெட்டு, போடி மெட்டு என 3 சாலை வழியாக சென்று வருகின்றனர். இதில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மூணாறு மலைச்சாலை உள்ளது.
போடி மெட்டு-மூணாறு தேசிய நெடுஞ்சாலையில் ரூ.381.76 கோடி மதிப்பில் அகலப்படுத்தும் பணி கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கியது. பணிகள் முடிந்து பல மாதங்கள் ஆகின்ற நிலையில் சாலை யை அதிகாரப்பூர்வமாக தற்போது திறப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 17ந் தேதி திறந்து வைப்பதாக இருந்தது. ஆனால் பல்வேறு காரணங்களால் மத்திய மந்திரி நிதின் கட்கரி வர இயலவில்லை. இதனால் சாலை திறப்பு ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் வருகிற 12-ந் தேதி மத்திய மந்திரி நிதின் கட்கரி மூணாறு-போடி மெட்டு என்ற சாலையை திறந்து வைக்கிறார் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதேபோல் ரூ.25 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள செருதோணி பாலத்தையும், அடிமாலி-குமுளி தேசிய நெடுஞ்சாலை என்.எச்.185 அகலப்படுத்தும் பணிகளையும் அவர் தொடங்கி வைக்கிறார். இதில் கேரள முதல்-அமைச்சர் பினராயிவிஜயன், மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர். இயற்கை எழில் சூழ்ந்த மலைப்பகுதியில் வளைந்து நெழிந்து செல்லும் சாலையில் பயணிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.