திமுக (DMK) ‘டிரக்’ முன்னேற்ற கழகமாக மாறியுள்ளது - நிர்மலா சீதாராமன்..!
அவிநாசியில் மங்கலம் சாலையில் உள்ள திருமண மண்டபத்தில், நீலகிரி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்தும், மகளிர் சுய உதவிக்குழுவினருடான கலந்துரையாடல் கூட்டத்தில் இன்று பங்கேற்ற மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியது: “தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதியில் நலத்திட்டங்கள் வருமா என்று சந்தேகம் இருந்த நிலையில், இன்றைக்கு நமக்கும் வரும் என்ற நம்பிக்கை கிடைத்துள்ளது.
நீங்கள் எம்.பி, கொடுக்காவிட்டாலும், எம்.எல்.ஏ. கொடுக்காவிட்டாலும் வீட்டுக்கு தேவையான கழிவறை, குடிநீர் குழாய், கான்கிரீட் வீடு என ஏழை மக்களுக்கான திட்டங்களை தீட்டி வருகிறார் பிரதமர் மோடி. சுய உதவிக்குழுவில் உள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும், அந்தப் பெண்களுக்கு ஏதோவொரு வகையில் உதவுகிறார் பிரதமர் மோடி.
‘என் குடும்பம் எப்படியாவது வாழ வேண்டும். குடும்ப அரசியல் என்று என்னை திட்ட வேண்டாம். ஆனால், மக்கள் ஆதரவு தருகிறார்கள். மக்களை அவமானப்படுத்த வேண்டாம்’ என்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். ஆனால், இந்த நாட்டு மக்கள்தான் என் குடும்பம் என்கிறார் மோடி.
பின் தங்கிய வகுப்பை மத்திய அமைச்சர் எல்.முருகன் நீலகிரி தொகுதியில் நிற்கிறார். நாடாளுமன்றத்தை மட்டும் மோடி கட்டவில்லை. ஒவ்வொருவருக்கும் வீடு கட்டித் தருகிறார். மின்சாரம், கேஸ் இணைப்பு இருக்கிறதா என மோடி பார்க்கிறார்.
நீலகிரி மக்களவைத் தொகுதியில் படுகர்கள் ஏராளமானோர் உள்ளனர். திமுகவில் எம்.எல்.ஏ.வும், மாவட்ட செயலாளருக்கும் ஒத்துப்போவதில்லை. காரணம், அங்கிருக்கும் சாதி தான். ஆனால், எல்.முருகனின் டெல்லி வீட்டுக்கு சென்று பிரதமர் மோடி பொங்கல் விழாவில் பங்கேற்றார்.
பெண்களை முன் நிறுத்தி திட்டம் வகுக்கிறார் பிரதமர் மோடி. பூச்சி மருந்தை டிரோன் மூலம் பயிர்களுக்கு இன்று வயலில் தெளிக்க முடியும். மகளிர் சுய உதவிக்குழு பெண்களை அழைத்து வந்து பயிற்சி அளித்து, அவர்களுக்கு தேவையான ஊக்கத் தொகை, டிரோன் வாங்க கடனும் வந்துவிடும் என விவசாயத்தில் புரட்சி செய்யக்கூடிய அளவுக்கு, பெண்கள் கையில் தந்தவர் பிரதமர் மோடி. இன்றைக்கு கிராமங்களில் டிரோனை இயக்கும் பெண்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் கிடைக்கிறது. பாரதி கண்ட புதுமைப் பெண்ணை இன்றைக்கு பிரதமர் மோடி மூலம் பார்க்கிறோம்.
ஒவ்வொரு கிராமத்திலும் சுய உதவிக்குழுவில் உள்ள பெண்கள் இன்றைக்கு சம்பாதிக்க ஆரம்பித்துள்ளனர். தன்மானத்தோடு லட்சங்களில் பெண்கள் கிராமங்களில் சம்பாதிக்க திட்டம் தீட்டுகிறார் பிரதமர் மோடி. தமிழ்நாடு அரசு பெண்களை எப்படி நடத்துகிறது என்பதையும் சொல்ல வேண்டும். தகுதி உள்ள பெண்களுக்கு உரிமைத் தொகை வழங்குகிறது மாநில அரசு. சென்னை மாநகராட்சி பெண் மேயர் எவ்வளவு சிரமங்களுக்கு ஆளாகிறார் என்பதை நாம் வீடியோ பதிவுகளில் பார்க்கிறோம்.
அந்தக் கட்சியால் திராவிட சொந்தங்கள் கட்டுக்குள் வைக்கச் சொல்ல முடியுமா? போதையால் பாதிக்கப்பட்ட பெண்கள் தமிழ்நாட்டில் இருப்பது வேதனை அளிக்கிறது. வசூல் அரசியல் தமிழ்நாட்டில் வேரூன்றி இருப்பது கவலை அளிக்கிறது. திராவிட முன்னேற்ற கழகம் இல்லை… டிரக்ஸ் முன்னேற்ற கழகத்தை விரட்டுவோம்” என்று அவர் பேசினார். இந்நிகழ்வில் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. உட்பட பலர் பங்கேற்றனர்.
மகளிர் சுய உதவிக்குழுவை சேர்ந்த பெண்கள் கூறும்போது, “புதுப்பாளையத்தில் மான் அதிகளவில் இருந்து வருகிறது. இதனால் விவசாயிகள் கடந்த பல ஆண்டுகளாக சாகுபடி செய்ய முடியவில்லை. தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு உரிய ஊதியம் கிடைப்பதில்லை. தொடர்ந்து தாமதிக்கப்படுகிறது. அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்க வேண்டும். அதேபோல் 100 நாள் வேலை திட்டத்தை, 150 நாட்களாக உயர்த்த வேண்டும்” என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
முன்னதாக, தஞ்சாவூர் மேல வீதியில் நேற்று மாலை பாஜக சார்பில் 1 கி.மீ. தொலைவுக்கு ‘ரோடு ஷோ’ நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், தஞ்சை தொகுதி பாஜக வேட்பாளர் கருப்பு எம்.முருகானந்தத்தை ஆதரித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியது: “தஞ்சாவூர் பல எழுத்தாளர்களையும், இசைக் கலைஞர்களையும் உருவாக்கிய மண். இங்கு 6 ஆண்டுகளுக்கு முன்பு கஜா புயல் வீசி விவசாயிகளும், பொதுமக்களும் பாதிக்கப்பட்டபோது, நானும், இங்கு போட்டியிடும் கருப்பு முருகானந்தமும் பல உதவிகளை செய்து அவர்களது வாழ்வாதாரத்தை மீட்டுள்ளோம்.
கச்சத்தீவு விவகாரத்தை ஏன் இப்போது பேச வேண்டும் என்கிறார்கள். கச்சத்தீவை திமுக தாரைவார்த்து கொடுத்ததால்தான், இன்று வரை மீனவர்கள் பிரச்சினை தீராமல் உள்ளது என்ற உண்மையை அனைவரும் பேச வேண்டும். ‘டிஎம்கே’ என்றழைக்கப்படும் திமுக, ‘டிரக்’ முன்னேற்ற கழகமாக மாறியுள்ளது. போதைப் பொருட்கள் மூலம் திமுகவுக்கு வந்த செருக்கை, ஓட்டு மூலமாக நொறுக்க வேண்டும். திமுகவை நாம் ஓட ஓட விரட்ட தேர்தலில் மக்கள் கருப்பு எம்.முருகானந்தத்தை ஆதரிக்க வேண்டும்” என்று பேசியது குறிப்பிடத்தக்கது.