கரூர் துயரம் பற்றி நிர்மலா சீதாராமன் பேட்டி..!
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை அவர் நேரில் சந்தித்தார். சம்பவத்தின் போது என்ன நடந்தது என்பது குறித்தும், சிகிச்சை முறைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
பின்னர் நிருபர்களிடம் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது;
சமூக வலைதளங்கள் மூலம் பிரதமர், உள்துறை அமைச்சர் உள்ளிட்ட பலரும் இரங்கலை தெரிவித்தோம். நேற்றிரவு பிரதமர்,உள்துறை அமைச்சர் இருவரும், மத்திய அமைச்சர் முருகன் மற்றும் என்னையும் தனிப்பட்ட முறையில் சென்று பலியானவர்களின் குடும்பங்களை சந்தித்து, அவர்களுக்கு ஆறுதல் கூற வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
மருத்துவமனையில் அட்மிட் ஆனவர்களையும் பார்த்து சிகிச்சை எப்படி அளிக்கப்படுகிறது என்பதை விசாரிக்கவும் கூறினர். உடனடியாக தாம் வர விரும்புகிற மனநிலை இருந்தாலும் வரக்கூடிய சூழ்நிலை இல்லாத காரணத்தினால் எங்கள் இரண்டு பேரையும் பிரதமர் அனுப்பி வைத்துள்ளார்.
கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடத்தை கலெக்டர் காட்டினார். உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களில் சிலரை நாங்கள் பார்க்க முடிந்தது. அவர்களின் துக்கத்தை வார்த்தைகளினால் எங்களால் வர்ணிக்க முடியாத நிலைமை. அவர்கள் பேசுவதை கேட்டு என்னால் பேசக்கூட முடியவில்லை. அவர்களுக்கு ஆறுதல் சொல்ல முடியவில்லை.
7 வயது மகனை இழந்த தாய், மனைவியை இழந்த 60 வயது பெரியவர், அதேமாதிரி தனது அண்ணனை இழந்த பெண், தன் மகனை இழந்த தாய் இரண்டு பேரும் ஒரே வீட்டில்.. இப்படியாக பெருவாரியாக அவர்கள் ஏழைக்குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் கதறி அழுவதை பார்த்தால் நம்மால் பதில் சொல்ல முடியல, ஆறுதல் சொல்ல முடியல. அவர்களின் கைகளை பிடித்துக் கொண்டு, அவர்கள் பதட்டத்துடன் சொல்வதை கேட்க வேண்டிய நிலைமை.
ஆனாலும், பிரதமர் சொன்னதை அவர்களிடம் பகிர்ந்துவிட்டு அங்கிருந்து வெளியே வர வேண்டிய நிலைமை. ஒவ்வொரு வீட்டிலும் இந்த அனுபவம் தான். இந்த மாதிரி ஒரு சம்பவம் இனி நம்ம நாட்டில் எங்குமே நிகழக்கூடாது.ரொம்ப பரிதாபமான நிலைமை, அங்கு வாய் வார்த்தைக்கு இடம் இல்லை. அந்த மாதிரி ஒரு துக்கம்.
மருத்துவமனையில் மூச்சுவிடக்கூட முடியாமல் அவர்கள் (சிகிச்சை பெறுபவர்களை கூறுகிறார்) அந்த நிலைமையில் பேசுனது எல்லாவற்றையும் நான் பிரதமரிடமும், உள்துறை அமைச்சரிடமும் இன்று சந்தித்து சொல்லலாம் என்று நினைக்கிறேன்.
இந்த விசிட், முற்றிலும் அடிபட்டவர்களையும், உயிரிழந்தவர்கள் குடும்பத்தை பார்ப்பதற்காக மட்டும்தான் வந்திருக்கிறோம். இதில் வேறு ஒரு விஷயமும் இல்லை. நம்ம நாட்டில், நம்ம நாட்டு மக்கள் ஆர்வத்தோடு ஒரு பொது இடத்துக்கு வரும் போது நடக்கக்கூடிய இதுபோன்ற சம்பவங்கள், அதனால் வரக்கூடிய நிகழ்வுகள், அதனால் குடும்பங்களுக்கு வரக்கூடிய கஷ்டங்கள் இது எல்லாம்தான் மனதை உருக்குகிறது.
இதுதான் என்னால் இப்போது கொடுக்க முடிந்த ரிப்போர்ட். சிகிச்சையை சரியாகத்தான் கொடுத்துக் கொண்டிருக்கிறோம் என்று மருத்துவர்களும் சொல்லி இருக்காங்க. சேர்ந்த போது இருந்த நிலையை விட இப்போது பரவாயில்லை என்று சிகிச்சை பெற்று வருபவர்களும் சொல்றாங்க.
அதில் சில பேர் மேஸ்திரியாக (கட்டட வேலை பணியாளர்கள்) வேலை பார்ப்பவர்கள், அவர்களின் கைவிரல்கள் உடைந்துள்ளன. அவர்கள் தினமும் ஊதியம் இல்லாமல் கஷ்டப்படுகின்றனர். பிரதமர் நிவாரண நிதியில் இருந்து உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சமும், மருத்துவமனையில் அட்மிட் ஆகி வைத்தியம் பார்த்துக் கொண்டு இருப்பவர்களுக்கு ரூ.50 ஆயிரமும், பாதிக்கப்பட்டவர்களின் வங்கி கணக்கிற்கே நேரடியாக வழங்கப்படும் என்று பிரதமர் அறிவித்து இருந்தார்.
ஒவ்வொரு நோயாளியிடமும் நான் உங்கள் அக்கவுண்ட்டுக்கு பணம் வந்துவிட்டதா? இல்ல… இனிமேல் தான் கேட்க வேண்டுமா என்று கேட்டேன். அதுபற்றிய செய்தி ஏதேனும் தெரியுமா என்று கலெக்டரிடம் கேட்டேன். டிபிடி (Direct Benefit Transfer) பற்றி அப்போது அங்கே அவருக்கு செய்தி இல்லை என்றாலும் இப்போது சொல்றாங்க, இன்னிக்கு காலையில் தான் இ மெயில் மூலமாக ரெக்வஸ்ட் வந்திருக்கிறது என்று சொல்றாங்க. ஒவ்வொரு அக்கவுண்ட் விவரங்களை கேட்டுள்ளனர், அதை இன்று ராத்திரிக்குள் அனுப்பி விடுகிறேன் என்று கலெக்டர் கூறி உள்ளார்.
உடனடியாக அந்த பணம், பாதிக்கப்பட்டவர்களின் கணக்கிற்கு நேரிடையாக போகிறது என்பதை அடுத்த 2 நாட்களுக்குள் நான் கவனிக்க வேண்டிய விஷயம்.