நிர்மலா சீதாராமன் நேரு பல்கலைக்கழகத்தில் படித்தவர்...அவருக்கு ஆடவும் பாடவும் மட்டும்தான் தெரியும் - சுப்பிரமணியன் சுவாமி..!
நெட்டிசன் ஒருவர் வெளியிட்ட பதிவுக்கு கிண்டலாக பதிவிட்டுள்ள பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி. அந்தப் பதிவில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு ஆடவும் பாடவும் தான் தெரியும் என்று சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். 7 பட்ஜெட்டுகளை தாக்கல் செய்த முதல் நிதியமைச்சர் என்ற பெருமை நிர்மலா சீதாராமனுக்கு கிடைத்தது. அதே சமயத்தில், இந்த பட்ஜெட்டுக்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. பொதுவாக, மத்திய அரசு தாக்கல் செய்யும் பட்ஜெட்டில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டி எதிர்க்கட்சிகள் தான் அதிக எதிர்ப்பை பதிவு செய்யும். ஆனால், இந்த முறை எதிர்க்கட்சிகளையும் தாண்டி பொதுமக்களே இந்த பட்ஜெட்டை விமர்சித்து வருகிறார்கள்.
ஏழைகள், நடுத்தர மக்கள், மாத சம்பளதாரர்கள், தொழில் முனைவோர், சிறுகுறு தொழில் செய்வோர் என யாருக்கும் இந்த பட்ஜெட்டில் பெரிய அளவில் சலுகைகள் வழங்கப்படவில்லை. இதனால் இப்படியொரு பட்ஜெட்டை தாக்கல் செய்த நிர்மலா சீதாராமனை சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள். அந்த வகையில், ஜெகதீஷ் ஷெட்டி என்பவர் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், "பாஜவுக்கு வாக்களித்தவர்கள், தொழிலதிபர்கள், சம்பளதாரர்கள், நடுத்தர குடும்பத்தினர், நகர்ப்புற வாக்காளர்கள் என அனைவருக்கும் ஏமாற்றம் அளிக்கும் ஒரு பட்ஜெட்டாகவே இருக்கிறது. எதிர்பார்த்தப்படியே இந்த அரசாங்கத்துக்கு பொருளாதாரம் குறித்த பற்றிய புரிதலே இல்லை. பொருளாதாரத்தில் எதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதும் தெரியவில்லை" எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்த பதிவுக்கு பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி பதிலளித்துள்ளார். அந்தப் பதிவில், "இந்த பட்ஜெட்டை பொறுத்தவரை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது குற்றம்சாட்டுவது சரியாக இருக்காது. ஏனெனில் இந்த பட்ஜெட்டானது பிரதமர் அலுவலகத்தால் தயாரிக்கப்பட்டது. அங்குள்ள முட்டாள்கள் அதில் கையொப்பமிடுவதற்காக மட்டும் நிர்மலா சீதாராமனிடம் அனுப்பி வைத்தனர். நிர்மலா சீதாராமன் ஜேஎன்யு பல்கலைக்கழகத்தில் படித்தவர். அதனால் அவருக்கு ஆடவும், பாடவும் மட்டுமே தெரியும்" எனக் கூறியுள்ளார்.
Of course it is difficult to blame FM because the Budget was made in PMO but the morons there sent it to “Nimi” for signature. She is of JNU alumni which means she knows only natch & gaana https://t.co/fCgdLbEKg6
— Subramanian Swamy (@Swamy39) July 23, 2024
.png)