நிபா வைரஸ் அலெர்ட்..! பறவைகள் கடித்த பழங்களை சாப்பிட வேண்டாம்..!
நிபா வைரஸ் கேரளாவில் வேகமாக பரவி வருகிறது. மலப்புரம், பாலக்காடு உள்ளிட்ட மாவட்டங்களில் வைரஸ் பரவலை தடுக்க, பாதுகாப்பு நடவடிக்கைகளை அம்மாநில அரசு தீவிரப்படுத்தியுள்ளது. தமிழகத்தில் 'நிபா' வைரஸ் பரவாமல் இருக்க கேரள எல்லையில் உள்ள தமிழக மாவட்டங்கள் சுகாதாரத்துறை அதிகாரிகளால் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, கேரளாவில் இருந்து வரும் வாகனங்களை நிறுத்தி யாருக்காவது காய்ச்சல் உள்ளதா என பரிசோதனை செய்கின்றனர். காய்ச்சல் இருந்தால், 'எத்தனை நாட்களாக உள்ளது; இருமல் - தொண்டை வலி உள்ளதா, நிபா வைரஸ் அறிகுறிகள் தென்படுகிறதா' என, பரிசோதனை செய்கின்றனர்.
காய்ச்சல் உள்ளவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, உடனடியாக அவர்கள் மருத்துவமனைக்கு சென்று ரத்த பரிசோதனை செய்ய வலியுறுத்தப்படுகின்றனர்.மேலும் விவரங்களை சம்பந்தப்பட்ட நபர் வசிக்கும், அந்தந்த வட்டார சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும் அனுப்பி வருகின்றனர்.
அதேபோல், வௌவால்கள் கடித்த பழத்தால் நிபா வைரஸ் பரவி வருவதாக கூறப்படும் நிலையில், கேரளாவில் இருந்து வரும் வாகனங்களில் பழங்கள் இருக்கிறதா? என்றும் பறவைகள், விலங்குகள் கடித்த பழங்களை பயன்படுத்த வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் பழங்களை நன்கு கழுவி பயன்படுத்த வேண்டும். தோட்டத்தில் அணில் அல்லது வேறு பறவைகள் கடித்த பழங்களை உண்ணக்கூடாது. பயன்பாடு இல்லாத நீர்நிலைகள், கிணறு பகுதிகளுக்கு செல்லக்கூடாது.
பழந்தின்னி வவ்வால்களிடம் இருந்து பன்றிகளுக்கும், மனிதர்களுக்கும், நிபா வைரஸ் பரவ வாய்ப்புள்ளது. தொற்று தீவிரமடையும் பட்சத்தில் சுவாச கோளாறு மற்றும் மூளையில் வீக்கம் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. பெரியவர்கள், சிறியவர்கள் முககவசம் அணிவது நல்லது.
காய்ச்சல் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டால் உடனடியாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை மேற்கொண்டு உரிய சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கி வருகின்றனர்.