வரும் 15ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு.. பள்ளி, கல்லூரிகளை மூட அரசு உத்தரவு..!
வரும் 15ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு.. பள்ளி, கல்லூரிகளை மூட அரசு உத்தரவு..!

பஞ்சாப் மாநிலத்தில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பள்ளி, கல்லூரிகளை மூடவும் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
ஒமைக்ரான் கொரோனா வகை நாடு முழுவதும் வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து மாநில அரசுகள் கொரோனா கட்டுப்பாட்டை தீவிரப்படுத்தி வருகின்றன. இந்நிலையில், பஞ்சாப் அரசு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘கொரோனா தடுப்பு நடவடிக்கையாக புதிய கட்டுப்பாடுகள் மாநிலம் முழுவதும் விதிக்கப்படுகிறது.
இந்த கட்டுப்பாடுகள் இன்று (4ம் தேதி) முதல் ஜனவரி 15ம் தேதி வரை அமலில் இருக்கும். அனைத்து மாவட்டங்களிலும் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு விதிக்கப்படுகிறது.
அத்தியாவசிய சேவைகள், அலுவலகங்களில் இரவுநேர பணிகளுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. பள்ளி, கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் செயல்பட தடை விதிக்கப்படுகிறது. மருத்துவம் மற்றும் செவிலியர் கல்லூரிகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுகிறது.
மதுபானக் கூடங்கள், திரையரங்குகள், வணிக வளாகங்கள், உணவகங்கள், சலூன்களில் 50 சதவீத வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்க வேண்டும். விளையாட்டு பயிற்சி மையம், உடற்பயிற்சி கூடங்கள் செயல்பட தடை விதிக்கப்படுகிறது’ எனக் கூறப்பட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் தற்போது 1,741 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 5,87,530 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். 16,651 பேர் இதுவரை கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.