தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு.. தமிழ்நாடு முஸ்லிம் லீக் கோரிக்கை..!

தமிழக மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வரும் ஒமைக்ரான் தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்க இரவு நேர ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சி நிறுவனத் தலைவர் முஸ்தபா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''நாடு முழுவதும் கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் கொரோனாவின் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் தொற்று பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் ஒமைக்ரான் வேகமாக அதிகரித்து வருகிறது. இத்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்கி வருகிறது.
இதனிடையே, ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருவதால் இரவு நேர ஊரடங்கு, கொரோனா கட்டுப்பாடுகள் எனத் தடுப்பு நடவடிக்கைகள் தேவைப்பட்டால் மாநில அரசுகள் அமல்படுத்தலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அதன்படி, டில்லி, கர்நாடகா, அசாம், உத்தரப் பிரதேசம், கேரளா, கர்நாடகா எனப் பல்வேறு மாநிலங்களை ஒமைக்ரான் வகை கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கை அறிவித்துள்ளது.
தமிழகத்திலும் ஒமைக்ரான் தொற்று என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மத்திய சுகாதாரக் குழு தமிழகம் வருகை தந்து ஒமைக்ரான் தொற்று குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு என்பது தலைநகர் சென்னையில் அதிகரிக்கத் தொடங்கியது. இது சென்னை வாசிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இனி வரும் நாட்கள் பண்டிகை நாட்களாக இருப்பதால் மக்கள் அதிக அளவு பொது இடங்களில் கூடுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. இதனால் கொரோனா தொற்று தமிழகத்தில் மீண்டும் உச்சத்தைத் தொட வாய்ப்புள்ளது.
ஒமைக்ரான் தொற்றால் டில்லி உட்பட பல மாநிலங்கள் இரவு நேர ஊரடங்கைப் பிறப்பித்துள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக எந்த நடவடிக்கையும் தமிழக அரசு மேற்கொள்ளாமல் இருப்பது மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது.
தமிழக மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வரும் ஒமைக்ரான் தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்க, போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்வதோடு, இரவு நேர ஊரடங்கை அமல்படுத்த வேண்டுமெனவும் தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.