1. Home
  2. தமிழ்நாடு

சென்னையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஆய்வு..!

1

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபேவில் மார்ச் 1-ஆம் தேதி குண்டு வெடித்ததில் 10 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தை நடத்திய தீவிரவாதி மற்றும் அவரது கூட்டாளி சென்னையில் தங்கியிருந்தது NIA விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில், சென்னை மண்ணடி உள்ளிட்ட 5 இடங்களில் NIA அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த மார்ச் 1-ஆம் தேதி கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் வெடிகுண்டு வெடித்தது. நாடு முழுவதும் பபரபரப்பை ஏற்படுத்திய இந்த குண்டுவெடிப்பு வழக்கை NIA விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் ஷபீர் என்பவரை கைது செய்துள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் சென்னையில் தங்கியிருந்ததாக தகவல் வெளியானது.

குண்டு வெடிப்பை நடத்தியது, கர்நாடக மாநிலம் ஷிவமோகா மாவட்டத்தைச் சேர்ந்த முஸவீர் ஹூசைன் ஷாகிப், அப்துல் மாத்ரின் தாஹாஆகியோர் என்பது தெரியவந்துள்ளது.

இவர்களில் ஒருவர் பயன்படுத்திய தொப்பி, சென்னை சென்ட்ரல் பகுதியில் வாங்கப்பட்டு உள்ளது. குண்டு வெடிப்பு குற்றவாளிகள், டாக்கடர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள வணிக வளாகம் ஒன்றுக்கும் சென்றதாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் போலி ஆதார் கார்டு மூலம் திருவல்லிக்கேணியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் தனித்தனியாக தங்கி இருந்ததும் தெரியவந்துள்ளது.

குண்டுவெடிப்புக்கு முன்னரும் பின்னரும் இவர்கள் சென்னைக்கு வந்துள்ளனர். இவர்கள் சென்னையில் தங்கியிருந்த விடுதி, சென்ற இடங்கள், வணிக வளாகம், தொப்பி வாங்கிய இடங்களுக்கு சென்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரித்தனர். மேலும் வழக்கு தொடர்பாக சில சிசிடிவி காட்சி பதிவுகளையும் அவர்கள் ஆய்வு செய்தனர்.

மேலும் குண்டு வெடிப்பு தொடர்பாக பெங்களூரு பரப்பன அக்ரஹார மத்திய சிறையில் இருக்கும் கைதிகள் சிலரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடயை முக்கிய குற்றவாளிகளிடம் தொடர்பில் இருந்த இரண்டு பேர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் 2 பேரும் குண்டுவெடிப்புக்கு தேவையான தொழில்நுட்ப வசதிகளை செய்து கொடுத்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. குண்டுவெடிப்புக்கு முன்னரும் பின்னரும் முக்கிய குற்றவாளிகளுடன் இவர்கள் அடிக்கடி செல்போனில் பேசியதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்தும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

இதனிடையே, பெங்களூரு உணவக குண்டு வெடிப்பு தொடர்பான வழக்கில் தமிழகத்தில் என்ஐஏ சோதனை மேற்கொண்டு வருகிறது. சென்னையில் மண்ணடி உள்ளிட்ட 5 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பெங்களூரு வழக்கில் தொடர்புடைய இருவர் சென்னையில் தங்கியதாக கூறப்பட்ட நிலையில் தற்போது சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Trending News

Latest News

You May Like