அடுத்த விக்கெட் அவுட்? கடும் அதிர்ச்சியில் அண்ணா அறிவாலயம்!

திருவண்ணாமலையில் அதிமுக அரசின் திட்டங்களை திமுக எம்எல்ஏ. ஒருவர் பாராட்டி பேசியுள்ளதாகவும், இதனால், அவர் எதிர்முகாம் செல்ல வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ.வாக இருப்பவர் கே.வி.சேகரன். அந்த தொகுதியில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமை தொடங்கி வைத்துப் பேசிய கேவி சேகரன், எம்.ஜி.ஆர். குறித்து மிகவும் புகழ்ந்து பேசியதாக கூறப்படுகிறது.
மேலும், சிறப்பு மருத்துவ முகாம் அமைத்துள்ள தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து புகழ்ந்து பேசினார் என்றும் கூறப்படுகிறது. அவரது இந்த பேச்சு திமுக கொள்கைகளுக்கு முரணாக உள்ளது என்றும், அவர் எதிர் முகாம் செல்ல உள்ளதாகவும் திருவண்ணாமலையில் பரபரப்பு கிளம்பியுள்ளது.
ஏற்கனவே, திமுகவில் உள்ள கு.க.செல்வம் எம்எல்ஏ, அண்மையில் பாஜகவில் ஐக்கியமானார். அதுபோலவே, இவரும் திமுக கூட்டை விட்டு பறக்க உள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலால் திமுக தலைமை கொஞ்சம் அதிர்ச்சி அடைந்துள்ளது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவிடம் தலைமை விசாரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தீயாக பரவி வரும் நிலையில் திமுக எம்எல்ஏ, கேவி சேகரன் இதுவரை எந்த விளக்கமும் கொடுக்க முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.