அடுத்ததாக வேகமாக பரவும் டெங்கு: கட்டுப்படுத்த அரசு தீவிர முயற்சி

டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு சார்பில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கொரோனா ஓரளவுக்கு குறைந்த நிலையில் ஒமைக்ரான் மிரட்டி வருகிறது. இதற்கு இடையில் டெங்கு காய்ச்சலும் தமிழகத்தில் பரவி வருவது மருத்துவத்துறையினரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. மக்களும் அச்சத்தில் உள்ளனர். தமிழகம் முழுவதும் சிறிது சிறிதாக டெங்கு அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. எனினும் முன்பைவிட தற்போது கட்டுப்படுத்தி வருவாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இந்த நிலையில், கோவையில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் டெங்கு பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. குறிப்பாக பெரியவர்களைவிட குழந்தைகளே டெங்கு காய்ச்சலால் அதிகம் பாதித்து வருவதாக கூறப்படுகிறது.
கோவை அரசு மருத்துவமனையில் நாள் ஒன்றுக்கு 30-க்கும் மேற்பட்டோர் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுகின்றனர். தற்போது கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு 13 குழந்தைகள் 18 பெரியவர்கள் என 31 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
சிகிச்சை அளிப்பதோடு மட்டுமல்லாமல் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படும் நபர்களுக்கு சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளதாகவும். காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவர்களை அணுக வேண்டும் எனவும் தெரிவிக்கின்றனர்.
மக்கள் தங்கள் வீட்டையும் சுற்றுபுறத்தையும் சுகாதாரமாக வைத்திருந்தால் டெங்கு பாதிப்பில் இருந்து தப்பலாம் எனவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
newstm.in