அடுத்தடுத்து சோகம்.. 19ஆவது வார்டு அதிமுக பெண் வேட்பாளர் உயிரிழப்பு !
![அடுத்தடுத்து சோகம்.. 19ஆவது வார்டு அதிமுக பெண் வேட்பாளர் உயிரிழப்பு !](https://newstm.in/static/c1e/client/106785/migrated/aa332f094cf992756524cec75a4fb5bc.jpg?width=836&height=470&resizemode=4)
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், அ.தி.மு.க. பெண் வேட்பாளர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை தருமபுரம் சாலையை சேர்ந்தவர் ஜெயராமன் என்பவரின் மனைவி அன்னதாட்சி(64). இவர் நகர்மன்ற பதவிக்காக மயிலாடுதுறை நகராட்சி 19ஆவது வார்டில் அதிமுக சார்பில் வேட்புமனு தாக்கல் செய்து பிரசாரம் மேற்கொண்டு வந்தார். நேற்று காலை அதிமுக தொண்டர்களுடன் வாக்கு சேகரித்துள்ளார். தை மாதம் கடைசி வெள்ளிக்கிழமையான நேற்று விரதம் இருந்துள்ளார்.
மதியம் உணவு அருந்திய அவர் சின்னமாரியம்மன் கோவிலில் நடந்த திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்டார். பூஜையில் அன்னதாட்சி இருந்தபோது அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதியினர் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கனவே மாரடைப்பால் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
அ.தி.மு.க. வேட்பாளர் அன்னதாட்சி திடீர் என்று மரணம் அடைந்ததால் அவரது குடும்பத்தினர் மட்டுமின்றி, அ.தி.மு.க.வினரும் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
newstm.in