இல்லத்தரசிகளுக்கு அடுத்த ஷாக்..! புளி விலை ரூ.150 ஆக உயர்வு..!
தமிழகத்தில் புளி மொத்த விற்பனைக்கு புகழ்பெற்ற இடமாக இருந்து வருகிறது சேலத்தின் பாரம்பரியம் மிக்க லீ பஜார். இங்குள்ள ஏல விற்பனை மையங்களில், ஆண்டுதோறும் ஜனவரி தொடங்கி மே மாதம் வரை புளி ஏல விற்பனை நடைபெறும். அப்போது, லீ பஜாருக்கு சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகாவின் தும்கூரு, சல்லிக்கரை, தாவணகெர, ஆந்திராவின் இந்துப்பூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து புளி மூட்டைகளை வியாபாரிகள் கொண்டு வருவர்.
சேலத்தில் இருந்து தமிழகத்தின் சென்னை, கடலூர் உள்பட பெரும்பாலான மாவட்டங்களுக்கும், அண்டை மாநிலமான கேரளாவுக்கும் புளி மூட்டைகள் அதிகளவில் விற்பனை செய்யப்படுகின்றன. இந்நிலையில், நடப்பாண்டு சீசன் நீடிக்கும் நிலையில் சேலம் லீ பஜாருக்கு புளி வரத்து மிகவும் குறைவாக இருப்பதாக, மொத்த வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து மொத்த வியாபாரி கூறியது: வழக்கமாக புளி அறுவடைக் காலம் ஜனவரி மாதம் தொடங்கி மே மாதம் வரை நீடிக்கும். நடப்பாண்டு சேலம் உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கோடை மழை அடிக்கடி பெய்தது. இதன் காரணமாக, புளி விளைச்சல் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. விளைச்சல் குறைந்துவிட்ட நிலையில், பல இடங்களில் முன்கூட்டியே அறுவடை முடிவுக்கு வந்துள்ளது.
குறிப்பாக, சனி, செவ்வாய் என வாரம் இருமுறை நடைபெறும் ஏல விற்பனையின் போது, ஒவ்வொரு முறையும் 40 முதல் 50 டன் வரை புளி வரத்து இருக்கும். ஆனால், நடப்பாண்டு விளைச்சல் பாதிப்பு காரணமாக, தற்போது ஒவ்வொரு ஏல நாளிலும் 9 முதல் 10 டன் அளவுக்கு மட்டுமே புளி வரத்து இருக்கிறது. பல இடங்களில் அறுவடை முடிந்துள்ளதால், இன்னும் சில வாரங்களில் அறுவடை மொத்தமாக முடிந்துவிடும். புளி வரத்து 50 சதவீதத்துக்கு மேல் சரிந்துள்ள நிலையில், தேவை அதிகமாக இருக்கிறது.
எனவே, புளியை வியாபாரிகள் போட்டி போட்டு ஏலத்தில் வாங்குகின்றனர். எனவே, விலையும் அதிகரித்துள்ளது. தரமான கறிப்புளி கிலோ ரூ.150 முதல் ரூ.170 வரை விற்பனையானது. இது, கடந்த ஆண்டு ரூ.130 வரை விற்பனையானது. தோசைப்புளி கிலோ ரூ.140 முதல் ரூ.150 வரை விற்பனையானது. இது, கடந்த ஆண்டு ரூ.100 வரை விற்பனையானது. ஃபிளவர் புளி எனப்படும் சாதாரண ரக புளி கிலோ ரூ.85 முதல் ரூ.115 வரை விற்பனையானது. இது கடந்த ஆண்டு ரூ.70 முதல் ரூ.90 வரை விற்பனையானது, என்றார்.