1. Home
  2. தமிழ்நாடு

தமிழக அரசுக்கு அடுத்த நெருக்கடி..! மாம்பழத்தை தொடர்ந்து பருத்தியிலும் பிரச்னை..!

1

கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம்,அரியலுார், பெரம்பலுார், உள்ளிட்ட மாவட்டங்களில், 4.39 லட்சம் ஏக்கருக்கு மேல் பருத்தி சாகுபடி நடந்து வருகிறது. ஆண்டுதோறும், 4.61 லட்சம் டன் பருத்தி உற்பத்தி செய்யப்படுகிறது.

தேசிய அளவில் உள்ள பருத்தி நுாற்பாலைகளில், 55 சதவீதம் தமிழகத்தில்தான் உள்ளன. இந்த ஆலைகள் தொடர்ந்து இயங்க ஆண்டுதோறும் 1.20 கோடி 'பேல்' பருத்தி தேவைப்படுகிறது.
 

இதில், 95 சதவீத தேவையை குஜராத், மஹாராஷ்டிரா, தெலுங்கானா, ஆந்திரா மாநிலங்கள்தான் பூர்த்தி செய்கின்றன.
 

தேசிய பருத்தி வாரியம் நிர்ணயிக்கும் விலையில், தமிழகத்தில் பருத்தி கொள்முதல் செய்யப்படுவது இல்லை. இதனால், பருத்தி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டுவது கிடையாது.
 

இருப்பினும், பருத்தி சாகுபடியை அதிகரிக்கும் பணிகளை, வேளாண் துறை மேற்கொண்டு வருகிறது.
 

பலன் தரும் பருத்தி சாகுபடி திட்டம் என்ற பெயரில், விவசாயிகளுக்கு 2024 - 25ம் ஆண்டு 11 கோடி ரூபாய் மானியம் வழங்கப்பட்டது. நடப்பாண்டு இத்திட்டத்தை செயல்படுத்த, 12.2 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.
 

டெல்டா மாவட்டங்களில் கோடை உழவு நேரத்தில் நெல்லுக்கு மாற்றாக, 1 லட்சம் ஏக்கருக்கு மேல் பருத்தி சாகுபடி நடந்துள்ளது.
 

ஈரப்பதம் 6 சதவீதத்திற்கு அதிகமாக உள்ளதாகவும், போக்குவரத்து செலவு அதிகம் எனக் கூறியும், தனியார் தரப்பில், 1 டன் பருத்தி, 50,000 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
 

அதே நேரத்தில், வெளிமாநிலங்களில் 1 டன் 70,000 முதல் 80,000 ரூபாய் வரை கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால், விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இதுதொடர்பாக, டெல்டா மாவட்டங்களில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில், அதிகாரிகள், கமிஷன் ஏஜன்டுகளுடன் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர்.
 

மாம்பழ விவசாயிகள் பிரச்னையை தொடர்ந்து, டெல்டாவில் பருத்தி பிரச்னை தலைதுாக்கியுள்ளதால், தமிழக அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
 


இதுகுறித்து, தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறியதாவது:
 

பருத்தி சாகுபடியில் இருந்து பிற பயிர்கள் சாகுபடிக்கு தமிழக விவசாயிகள் மாறி வருவது, நுாற்பாலைகளுக்கு பெரும் சவாலாக உள்ளது.
 

எனவே, பருத்தி உற்பத்தி திறனை அதிகரிக்க, வேளாண் துறையினர் நடவடிக்கை எடுப்பதாக கூறுகின்றனர். அதேநேரத்தில், உற்பத்தி செய்த பருத்திக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை.
 

டெல்டா மாவட்டங்களில் பருத்தியை குறைந்த விலைக்கு வாங்குகின்றனர். ஒழுங்குமுறை விற்பனை கூட அதிகாரிகள் மற்றும் தனியார் கூட்டணி அமைத்து, இச்செயலில் ஈடுபடுகின்றனர். இதனால், பிரச்னை தலைதுாக்கியுள்ளது.
 

நுாற்பாலைகள் வாயிலாக கொள்முதல் விலையை அறிவித்து, அதன்படி பருத்தியை கொள்முதல் செய்ய, மாவட்ட கலெக்டர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 

டெல்டா மாவட்டங்களில், ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் மூன்று நாட்களாக பிரச்னை நடந்து வரும் நிலையில், அரசு அதை கண்டும் காணாமலும் உள்ளது. பிரச்னை அதிகரிப்பதற்குள் தீர்வு காண வேண்டும்.
 

இவ்வாறு அவர் கூறினார்.

Trending News

Latest News

You May Like