1. Home
  2. தமிழ்நாடு

கண்ணீர் வரவழைக்கும் செய்தி : காசாவிலிருந்து வெளியேறியவர்கள் குடிதண்ணீர் கூட இல்லாமல் பரிதவிப்பு..!

1

இஸ்ரேலை நோக்கி ஹமாஸ் தீவிரவாதிகள் நடத்திய ஏவுகணை தாக்குதலைத் தொடர்ந்து 8-வது நாளாக இஸ்ரேல் பதில் தாக்குதலை நடத்தி வருகிறது. ஹமாஸ் தீவிரவாதிகள் இருந்த இடம் தெரியாமல் அழிக்கப்படுவார்கள் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சூளுரைத்துள்ளார். இந்தச் சூழலில் நேற்று  (அக்.13) தரைவழித் தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது. இந்தப் போரினால் காசாவின் மத்திய மற்றும் வடக்குப் பகுதிகள் மோசமான தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன.

இந்நிலையில் வியாழக்கிழமை பின்னிரவு நிலவரப்படி காசா பகுதியில் இருந்து 4 லட்சத்து 23 ஆயிரம் பேர் வெளியேறியுள்ளதாக ஐ.நா. அறிக்கை வெளியிட்டுள்ளது. ஐ.நா.வின் அங்கமான மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. காசா பகுதியில் குடியிருப்புகள், பள்ளிகள், மசூதிகள், மருத்துவமனைகள் என எதையும் விட்டுவைக்காமல் இஸ்ரேலியப் படைகள் தாக்கிவரும் சூழலில் உயிருக்கு அஞ்சி லட்சக்கணக்கானோர் அங்கிருந்து வெளியேறிய வண்ணம் உள்ளனர். கடைசித் தகவலின்படி காசாவிலிருந்து 4 லட்சத்து 23 ஆயிரம் பேர் வெளியேறியுள்ளனர்.

காசாவில் தண்ணீர், சுகாதார வசதிகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை தாக்குதல் தொடங்கியதிலிருந்து இப்போது வரை அங்கே 6 கிணறுகள், 3 நீரேற்று நிலையங்கள், ஒரு தண்ணீர் ஊற்று மற்றும் ஒரு நீர் சத்திகரிப்பு நிலையம் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் ஒரு கோடிக்கும் மேற்பட்ட மக்கள் தண்ணீர் வசதியின்றி பாதிக்கப்பட்டுள்ளனர். 50 ஆயிரம் கர்ப்பிணிகள் உணவு, தண்ணீரின்றி வாடிவருகின்றனர் என ஐ.நா. தெரிவித்துள்ளது. மேலும் காசாவில் தீவிர தாக்குதல் பகுதிகளில் 11 லட்சம் பேர் சிக்கியுள்ளனர் என்றும் அவர்களை உடனடியாக மீட்காவிட்டால் அத்தனை பேரும் பட்டினியாலேயே உயிரிழக்க நேரிடும் என்றும் ஐ.நா. வேதனை தெரிவித்துள்ளது. இதுவரை 1400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்றும் ஐ.நா. அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like