திருமணமான 22ஆவது நாளில் கணவனைக் கொல்ல திட்டமிட்ட புதுப்பெண்!!

தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் திருமணமான 22ஆவது நாளில் புதுமணப்பெண் ஒருவர் கணவரைக் கொல்ல திட்டமிட்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கம்பம் குரங்குமாயன் தெருவை சேர்ந்த கேபிள் டிவி ஊழியரான கவுதம் (24) அதே பகுதியை சேர்ந்த புவனேஸ்வரிக்கு (21) கடந்த மாதம் 10ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கடந்த 8ஆம் தேதி புவனேஸ்வரி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து கம்பம் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. புவனேஸ்வரிக்கு, தொடக்கத்தில் இருந்தே கவுதமை பிடிக்கவில்லை. எனவே அவர் கவுதமை கொலை செய்ய திட்டமிட்டார்.
புவனேஸ்வரி போலீஸ் தேர்வுக்கு பயிற்சி எடுத்த போது, நிரஞ்சன் (22) என்பவருடன் நட்பாக பழகி இருந்தார். இந்நிலையில் புவனேஸ்வரி தனது நகையை அடகு வைத்து ரூ.75 ஆயிரம் பணத்தை நிரஞ்சனிடம் கொடுத்து, கணவரை கொல்ல திட்டமிட்டார்.
திருமணமான 22ஆவது நாளில் புவனேஸ்வரி கணவரை, ஸ்கூட்டரில் வெளியில் அழைத்து வந்தார். அப்போது பின்னால் ஒரு கார் வேகமாக வந்து கவுதமின் ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் காயம் இன்றி அவர் உயிர் தப்பினார்.
காரில் இருந்த 5 பேர் கவுதமை தாக்கிவிட்டு தப்பிச் சென்றனர். கவுதம் அளித்த புகாரின் அடிப்படையில் தாக்கியவர்களை போலீஸார் தேடி வந்தனர். இதனால் அச்சம் அடைந்த புவனேஸ்வரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனிடையே கவுதம் மீது காரை ஏற்றி கொலை செய்ய முயன்ற நிரஞ்சன், அவரது நண்பர் 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.