புதுசு புதுசா ஏமாத்துறாங்கப்பா..! வீடு 'லீசு'க்கு விட்டு ரூ.1.60 கோடி மோசடி..!

காவல் துறை வட்டாரங்கள் தரப்பில் கூறியதாவது:
சென்னையைச் சேர்ந்தவர் கனக்கப்பிள்ளை அப்துல் ஹமீத் நின்மத்நிஷா, 45. இவரது மகன் அஜ்மன் அப்துல்லா, 22.
இருவரும், நீலாங்கரை, ரங்காரெட்டி அவென்யூவில், 'ஜூன் ஹோம் பிரைவேட் லிமிடெட்' எனும் பெயரில், தனியார் நிறுவனம் ஒன்றை, 2023ம் ஆண்டு முதல் நடத்தி வருகின்றனர்.
இந்நிறுவனம் சார்பில் நீலாங்கரை சுற்றுவட்டாரப்பகுதிகளில், காலியாக உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள், தனி வீடுகள், வில்லாக்கள், வெளிநாடுகளில் வசிப்பவர்களின் வீடுகள் என தேர்வு செய்து, அவர்களிடம் தற்போதைய வாடகையை விட, 50 சதவீதம் உயர்த்தி தருவதாக பேராசை காட்டி, மூளைச் சலவை செய்து ஒப்பந்தம் போடுகின்றனர்.
அடுத்த எட்டு மாதங்கள் வரை, நாள் தவறாமல் பேசியபடி வாடகை வீட்டு உரிமையாளர்களின் வங்கி கணக்கில் செலுத்தியுள்ளனர். அடுத்து செலுத்தவில்லை.
இதனிடையே வாடகைக்கு எடுத்த வீட்டை, 7 லட்சம் ரூபாய் முதல் 20 லட்சம் ரூபாய் வரை 'லீஸ்' வீட்டு தாய் - மகன் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. ஜூன் ஹோம்சிற்கு தொடர்பு கொண்டால் யாரும் போன் எடுக்கவில்லை. நேரில் சென்று பார்த்தபோது, அவர்கள் தலைமறைவானது தெரிய வந்தது.
பாதிக்கப்பட்ட 30க்கும் மேற்பட்டோர் நீலாங்கரை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த மோசடியில் சிக்கி, 1.60 கோடி ரூபாய் வரை பணம் இழந்துள்ளனர். பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்த வழக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் வசம் மாற்றப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.