வங்கக்கடலில் புதிய புயல் சின்னம்.. கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை !

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. மதுரை, விருதுநகர், வேலூர், சிவகங்கை, நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது.
சென்னையில் கடந்த 3 நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில், வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது, வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் நல்ல மழைபெய்து வருகிறது. இதனால் விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, சேலம் மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், புதுவையில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என்றும், இதன் காரணமாக பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் வரும் 23ஆம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
newstm.in