தமிழகத்தில் நிலங்களுக்கான புதிய வழிகாட்டி மதிப்பு அமல்..!

கடந்த திங்கட்கிழமை முதல் தமிழகத்தில் நிலங்களுக்கான புதிய வழிகாட்டி மதிப்பு அமலுக்கு வந்துள்ளதாக பதிவுத்துறை தெரிவித்துள்ளது.
புதிய வழிகாட்டி மதிப்பின் அடிப்படையில் கணக்கிட்டால், நிலங்களின் மதிப்பு குறைந்தபட்சம், பத்து விழுக்காடு அதிகரித்துள்ளதாகத் தெரிகிறது.விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளதால், அங்கு இந்த நடவடிக்கை இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை
பல்வேறு தரப்பினரிடமிருந்து தமிழகத்தில் சந்தை மதிப்புக்கு ஏற்ப நிலங்களின் வழிகாட்டி மதிப்பு உயர்த்தப்பட வேண்டும் எனத் தொடர்ந்து கோரிக்கைகள் வந்ததாகவும் அவற்றை ஏற்று தமிழக அரசு வழிகாட்டி மதிப்பில் திருத்தங்களைப் பரிந்துரைக்க ஒரு குழுவை அமைத்தது.இதன் மூலம், பதிவுக்கட்டணத்திலும் மாற்றம் செய்ய அரசு முடிவெடுத்ததுடன், நிதிநிலை அறிக்கையிலும் இதுகுறித்து அறிவிப்பு இடம்பெற்றது.
இந்நிலையில், மக்கள் கருத்துகளைக் கேட்டு, அதற்கேற்ப வழிகாட்டி மதிப்பை நிர்ணயிக்க வேண்டும் என கட்டுமான நிறுவனங்கள் வழக்கு தொடுத்தன.
இதன் பின்னர் வழிகாட்டி மதிப்பு தொடர்பாக அமைக்கப்பட்ட குழுக்கள், மக்கள் கருத்துகளைக் கேட்டு, அதன் பேரில் வழிகாட்டி மதிப்பைத் திருத்தி அமைத்துள்ளன என்றும் புதிய வழிகாட்டி மதிப்பு ஜூலை 1ஆம் தேதி காலை முதல் அமலுக்கு வந்துள்ளது என்றும் பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.