1. Home
  2. தமிழ்நாடு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கில் புதிய தகவல்!

1

 அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். போலீஸ் விசாரணையில் ஞானசேகரன் மீது பல்வேறு காவல் நிலையங்களில் 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதும், அவர் பல முறை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர் என்பதும் தெரிந்தது.

மேலும், தொடர்ந்து ஞானசேகரன் பின்னணி குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், அவர் கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் திருட்டு வழக்குகளில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. அதன் அடிப்படையில் பல்வேறு திருட்டு வழக்குகள் சம்பந்தமாக ஞானசேகரனிடம் இருந்து சுமார் 120 சவரன் தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், இதில் சம்பந்தப்பட்ட ஒருவரையும் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.

அது மட்டுமின்றி சென்னையை அடுத்த மேடவாக்கம், பள்ளிக்கரணை சுற்று வட்டார பகுதிகளில் திருட்டு வழக்குகளில் ஈடுப்பட்ட ஞானசேகரன் மீது பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் ஏழு வழக்குகள் பதிவு செய்து அவரை ஏற்கனவே சிறையில் அடைத்திருப்பதும் தெரிய வந்தது.

இந்த நிலையில், தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் கடந்த 2013 ஆம் ஆண்டு மாம்பலம் பகுதியில் நடைபெற்ற திருட்டு வழக்கிலும் ஞானசேகரனுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் அவர் மீது மாம்பலம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஞானசேகரனை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மாம்பலம் போலீசார் நேற்று (மார்ச் 20) அவரை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து மாம்பலம் திருட்டு வழக்கில் ஞானசேகரனுக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் மேலும் 14 நாட்கள் நீதிமன்ற காவல் நீட்டித்து உத்தரவிட்டது. அதனை அடுத்து போலீசார் மீண்டும் பலத்த பாதுகாப்புடன் காவல்துறை வாகனத்தில் அவரை கொண்டு சென்று புழல் சிறையில் அடைத்தனர்.

மேலும் இந்த திருட்டு வழக்கில் தேவைப்பட்டால் ஞானசேகரனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவும் மாம்பலம் போலீசார் திட்டமிட்டு வருகின்றனர். அத்துடன், மேற்கொண்டு பல திருட்டு வழக்கில் ஞானசேகரனுக்கு தொடர்பு இருக்கிறதா? என்ற கோணத்திலும் தீவிரமாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Trending News

Latest News

You May Like