1. Home
  2. தமிழ்நாடு

நுழைவுத் தேர்வுக்கான தனியார் பயிற்சி மையங்களுக்கு புதிய வழிகாட்டி நெறிமுறைகள்..!

1

மருத்துவப் படிப்புகளுக்கு நீட் நுழைவுத் தேர்வு கட்டாயம் என மத்திய அரசு அறிவித்தது முதல் தங்கள் கனவு நிறைவேறாமல் போனதால் கிராமப்புறங்களைச் சேர்ந்த ஏழை மாணவர்கள் அதிகளவில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதையெல்லாம் கண்டுகொள்ளாத மத்திய அரசு நீட் நுழைவுத் தேர்வை தொடர்ந்து நடத்தி வரும் நிலையில், மாணவர்களின் தற்கொலையும் தொடர்கிறது. இதனைத் தொடர்ந்து அனைத்து தரப்பினரிடம் இருந்தும் நீர் நுழைவுத் தேர்வுக்கு எதிரான மனநிலை அதிகரித்து வருகிறது.

இதனிடையே, தனியார் பயிற்சி மையங்களில் படித்தால் மட்டுமே நீட் நுழைவுத் தேர்வில் வெற்றிபெற முடியும் என்ற நிலை பெற்றோர்கள், மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதனை பயன்படுத்திக் கொண்ட தனியார் பயிற்சி மையங்கள் அந்தந்த மாநிலங்களின் பெருநகரங்களில் பயிற்சி மையங்களை தொடங்கி, லட்சக் கணக்கில் கட்டணக் கொள்ளை அடித்து வருகின்றன.

மேலும், அந்த பயிற்சி மையங்களில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு அதிகப்படியான பளுவால் ஏற்படும் மனஉளைச்சலுக்கு உள்ளாகும் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கும் தள்ளப்பட்டு வருகின்றனர். கடந்த 7 ஆண்டுகளில் நீட் நுழைவுத் தேர்வால் உயிரிழக்கும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், நீட் நுழைவுத் தேர்வுக்கான தனியார் பயிற்சி மையங்கள் தங்களது பயிற்சி மையத்தின் விளம்பரங்களில் தவறான விவரங்களை குறிப்பிடுவதை தடுக்கும் நடவடிக்கையாக, "செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை" என்ற புதிய வரைவு வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் .

புதிய வரைவு வழிகாட்டி நெறிமுறைகளின் படி, பொய்யான, தவறான, மோசடியான விளம்பரங்களை வெளியிட தடை விதிக்கப்படுகிறது. பயிற்சி நிறுவனங்கள் விளம்பரங்களில் '100 சதவிகிதம் தேர்ச்சி' அல்லது '100 சதவீத வேலை உத்தரவாதம்' என்கிற உத்தரவாதத்தை வழங்க தடை விதிக்கப்படுகிறது, ஒரு நிறுவனத்தில் சேர்ந்து படித்தால் 100 சதவிகிதம் வெற்றி, தேர்வுகளின் முன்னிலை விவரம், மதிப்பெண் போன்ற எந்த உத்திரவாதத்தையும் வழங்க கூடாது, அப்படி உரிமைக் கோரி விளம்பரங்கள் வெளியிடுவது குற்றமாகும் மற்றும் தேர்வை சீர்குலைக்கும் பிற நடைமுறைகள் குறித்து தவறான விவரங்களை வெளியிடக்கூடாது.

மேலும், பொய்யான விளம்பரங்கள் வெளியிட்டால் அபராதம் விதிப்படுவதுடன், பயிற்சி நிறுவனங்களுக்கான அனுமதி ரத்து போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதோடு மட்டுமின்றி, அதுபோன்று பொய்யான விளம்பரங்களை வெளியிட்ட 31 பயிற்சி நிறுவனங்களுக்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பி உள்ளதுடன், அவர்களில் 9 பேருக்கு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், பயிற்சி நிறுவனம் வெற்றி பெற்ற மாணவரின் புகைப்படத்துடன் தேவையான தகவலைக் குறிப்பிட வேண்டும். ரேங்க், வகை மற்றும் பயிற்சி காலம் மற்றும் இலவசமா அல்லது கட்டணப் பயிற்சியா என்பது போன்ற விவரங்கள் விளம்பரத்தில் பயன்படுத்தப்பட்டதைப் போலவே மாணவரின் புகைப்படத்துடன் குறிப்பிடப்பட வேண்டும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகள் விரைவில் அமலுக்கு வர உள்ளதாகவும், நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. 

Trending News

Latest News

You May Like