ஆளுநர் மாளிகை அழைப்பிதழில் கிளம்பிய புது சர்ச்சை! மீண்டும் திருவள்ளுவருக்கு காவி உடை..!
அண்மைக் காலமாக பாஜக மற்றும் இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் திருவள்ளுவர் புகைப்படத்திற்கு காவி உடை மற்றும் ருத்திராட்ச மாலை அணிவித்து அவரை இந்து மத துறவியாக காட்டி வருகிறார்கள். இதற்கு திமுக உள்பட தமிழக அரசியல் கட்சிகள் அவ்வப்போது எதிர்வினையும் ஆற்றி வருகின்றனர்.
தமிழக ஆளுநருக்கு ஆளும் திமுக அரசுக்கும் பல்வேறு விவகாரங்களில் கருத்து மோதல் ஏற்படுகிறது.ஆளுநர் மசோதாவுக்கு ஒப்புதல் கொடுக்காமல் இழுத்தடிப்பதற்கும் கடும் எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு.. ஆளுநரின் செயல்பாடுகளுக்கு எதிராக வழக்கும் தொடர்ந்து உள்ளது. இவ்வாறாக ஆளுநருக்கும் தமிழக அரசுக்கும் இடையே மோதல் நீடித்து வரும் நிலையில், ஆளுநர் ரவி, ஆர் எஸ் எஸ் ரவி போல செயல்படுவதாக திமுக காட்டமாக விமர்சனங்களை முன்வைத்து வருகிறது.
இந்த நிலையில் ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அழைப்பிதழில் காவி உடையுடன் கூடிய திருவள்ளுவர் படம் இடம்பெற்றுள்ளது மீண்டும் சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. திருவள்ளுவர் திருநாள் விழா அழைப்பிதழ் என்ற பெயரில் உள்ள அந்த அழைப்பிதழில் திருவள்ளுவருக்கு காவி உடையோடு, நெற்றியில் திருநீறும், கழுத்தில் ருத்திராட்சமும் அணிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, இன்று மாலை 5 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் "திருவள்ளுவர் திருநாள் விழா" நடைபெறும் என ஆளுநர் மாளிகை தரப்பில் இருந்து அழைப்பிதழ் ஒன்று வெளியானது.இந்த விழா ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் திருவள்ளுவர் தினம் ஜனவரி 16ஆம் தேதி கொண்டாடப்படும் சூழலில், ஆளுநர் மாளிகை அறிவித்துள்ள திருவள்ளுவர் தினம் என்பது சர்ச்சைகளுக்கு ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசு பயன்படுத்தும் படங்களில் திருவள்ளுவர் வெள்ளை நிற ஆடை அணிந்தவாறு இடம் பெற்று இருக்கும். ஆனால், பாஜக மற்றும் இந்து அமைப்புகள் காவி நிற உடையோடு திருவள்ளுவர் படத்தை அச்சிட்டு வெளியிட்டு வருகிறார்கள். இந்த சூழலில்தான், காவி உடையில் திருவள்ளுவர் படத்தை ஆளுநர் மாளிகை வெளியிட்டிருப்பது மீண்டும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.