நெட்ஃப்ளிக்ஸ் சந்தா அதிரடி குறைப்பு.. புதிய கட்டணம் எவ்வளவு தெரியுமா..?
உலகின் மிகப்பெரிய வீடியோ ஸ்ட்ரீமிங் நிறுவனமான நெட்ஃப்ளிக்ஸில் தமிழ், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம், கொரியன் என பல மொழி திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களை கண்டுகளிக்க முடியும்.
பல திரைப்படங்கள் ஓடிடி-யில் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றுள்ள நிலையில், வாடிக்கையாளர்களை கவர நெட்ஃப்ளிக்ஸ் தனது மாத சந்தாக்களின் விலையை அதிரடியாக குறைத்துள்ளது. இந்த விலை மாற்றம் இன்று (டிசம்பர் 14) முதல் அமலுக்கு வருகிறது.
இந்தப் புதிய கட்டணம் பயனாளர்கள் அடுத்து செய்யும் ரீசார்ஜ் நாள் முதல் நடைமுறைக்கு வரும். புதிதாக நெட்ஃப்ளிக்ஸ் இணையும் நபர்கள், புதிய கட்டணங்களின் கீழ் எளிதாக இணைந்துகொள்ளலாம். மொபைல், பேசிக், ஸ்டேன்டேட் என மூன்று வகையான திட்டங்களை நெட்ஃப்ளிக்ஸ் கொண்டுள்ளது.
தற்போது, அதே விலையில் வேறு அடுத்த திட்டங்களுக்கு மாறுவதற்கான வாய்ப்பை நெட்ஃப்ளிக்ஸ் வழங்கியுள்ளது. மொபைல் வெர்ஷன் பயன்படுத்தி வந்த நபர்கள், தற்போது பேசிக் வெர்ஷன் 199 ரூபாய் என்பதால் ஈஸியாக அப்கிரேட் செய்துகொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதுதொடர்பான பயனாளர்களின் செல்போனுக்கு நோட்டிபிகேஷன் அனுப்ப திட்டமிட்டுள்ளது. பயனாளர்கள் அப்கிரேட் செய்ய விரும்புகிறார்களா அல்லது வேறு திட்டத்தில் இணைய விரும்புகிறார்களா என்பது போன்றவை இடம்பெறும் என கூறப்படுகிறது.
நெட்ஃப்ளிக்ஸ் மொபைல் திட்டம் இப்போது மாதத்திற்கு ரூ.149-ல் தொடங்குகிறது. இத்திட்டத்தில் பயனாளர்கள் 480p தெளிவுத்திறனில் காட்சியை செல்போன் அல்லது டேப்லெட்டில் காணலாம். இதை டிவி அல்லது லேப்டாப்பில் கனெக்ட் செய்ய இயலாது. அதே போல், இந்த கணக்கை ஒரு சாதனத்தில் மட்டுமே பயன்படுத்த முடியும்
பேசிக் திட்டம் தற்போது மாதத்திற்கு ரூ.199-க்கு கிடைக்கிறது. 480p தெளிவுத்திறன் கிடைத்தாலும், இந்த கணக்கை சிஸ்டத்தில் கனெக்ட் செய்யலாம். இதிலும், ஒரு சாதனத்தில் ஒரு நேரம் மட்டுமே பயன்படுத்த முடியும்.
ஸ்டேன்டேட் திட்டம் தற்போது மாதத்திற்கு ரூ.499-க்கு கிடைக்கிறது. 1080p தெளிவுத்திறன் காட்சியை இரண்டு சாதனங்களில் காணலாம். இந்த கணக்கை மொபைல், கணினி, லேப்டாப் என அனைத்திலும் கனெக்ட் செய்யலாம்.
ஹெச்.டி குவாலிட்டியில் பிரீமியம் நெட்ஃப்ளிக்ஸ் கணக்கு தற்போது மாதம் ரூ.649-க்கு கிடைக்கிறது. 4K தெளிவுத்திறன் மற்றும் ஒரே நேரத்தில் நான்கு சாதனங்களில் பார்க்கும் வசதி உள்ளது. மொபைல், டேப்லெட், கணினி மற்றும் டிவி ஆகிய நான்கு சாதனங்களிலும் ஒரே நேரத்தில் உபயோகிக்கலாம்.
நெட்ஃப்ளிக்ஸ் தனது சந்தா கட்டணத்தை குறைத்துள்ள நிலையில், அதன் போட்டியாளரான அமேசான் பிரைம் தனது சேவைக்கான கட்டணத்தை அதிகரித்துள்ளது. அமேசான் பிரைம் ஆண்டிற்கு தற்போது ரூ.1499ஆக உள்ளது. முன்பு, ரூ.999க்கு சந்தா பெறமுடிந்தது குறிப்பிடத்தக்கது.